கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே மனைவியை அடித்து கொலை செய்து விட்டு, அவரது உடலை தந்தை உதவியுடன் சுடுகாட்டில் வைத்து எரித்ததாகக் கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கணவன் மற்றும் மாமனாரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். சிதம்பரம் அருகே மீதிகுடி கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் யாகப்பன். இவரது மகன் ரவிச்சந்திரன். இவருக்கும் சிவகாமி என்பவருக்கும் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்தத் தம்பதிக்கு 9 வயதில் மகன் ஒருவர் உள்ளார். இந்நிலையில், ரவிச்சந்திரனுக்கும் சிவகாமிக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, நேற்று முன்தினம் (அக் 30) இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த ரவிச்சந்திரன், மனைவி சிவகாமியைத் தாக்கியதாகவும், இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, மனைவியின் உடலை வீட்டில் இருந்து அடையாளம் தெரியாத வாகனம் ஒன்றில் ஏற்றிச் சென்ற ரவிச்சந்திரன், அதே கிராமப் பகுதியில் உள்ள சுடுகாட்டுக்குக் கொண்டு சென்றுள்ளார். அங்கு யாருக்கும் தெரியாமல் உடலை எரித்து விட்டுச் சென்றதாகத் தெரிகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பாக சுடுகாட்டில் பணிபுரியும் பன்னீர்செல்வம் மற்றும் அவரது நண்பர் விஜயன் ஆகியோரைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, ரவிச்சந்திரன் தனது மனைவியைக் கொலை செய்துவிட்டு உடலை எரிக்கக் கொண்டு வந்ததாக அவர்கள் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. மேலும், விறகுக் கடை நடத்தி வரும் ரவிச்சந்திரனின் தந்தை யாகப்பனும் இந்தச் சம்பவத்தில் உதவியதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. வீட்டில் உயிரிழந்து கிடந்த சிவகாமியின் உடலை வாகனத்தில் ஏற்றி சுடுகாட்டுக்கு கொண்டு சென்று எரிப்பதற்கு யாகப்பன் உதவியதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, சிவகாமியின் உடலை எடுத்துச் செல்லப் பயன்படுத்திய வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள ரவிச்சந்திரன் மற்றும் அவரது தந்தை யாகப்பன் ஆகிய இருவரையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இதற்கிடையே, கொலை நடந்ததாக கூறப்படும் வீட்டில் விழுப்புரத்தில் இருந்து வந்த தடயவியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். வீட்டில் ஆய்வை முடித்த பிறகு, சுடுகாட்டில் எரிந்த நிலையில் உள்ள சிவகாமியின் உடல் எச்சங்களையும் ஆய்வு செய்ய உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாக அவரைக் கணவரே அடித்துக் கொலை செய்துவிட்டு, தடயங்களை மறைக்கும் வகையில் தந்தையின் உதவியுடன் உடலைச் சுடுகாட்டில் வைத்து எரித்ததாகக் கூறப்படும் இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.