க்ரைம்

“கிணத்துல குதிச்சா விடுவாங்களா?” - இளம்பெண்ணை நோட்டமிட்டு பின் தொடர்ந்த வாலிபர்கள்.. போலீஸ் செய்த சிறப்பான சம்பவம்!

இளம்பெண் இருசக்கர வாகனத்தை எங்கும் நிறுத்தாமல் தனது வீட்டிற்கு அருகில் சென்றவுடன் கத்தி கூச்சலிட்டிருக்கிறார்...

Mahalakshmi Somasundaram

கோயம்பத்தூர் மாவட்டம் சூலூர் அடுத்துள்ள மந்திரி பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் 19 வயதுடைய இளம் பெண் இவர் 12 ஆம் வகுப்பு படித்து முடித்துவிட்டு சூலூரில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். தினமும் வேலை முடித்துவிட்டு இரவு 7 மணியளவில் தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்துள்ளார். அதே பகுதியில் உள்ள கோழி பண்ணையில் ஓட்டுநராக பணிபுரியும் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ் மற்றும் சரண் ஆகிய இருவரும் இளம்பெண் சில நாட்களாக நோட்டமிட்டு வந்துள்ளனர்.

வழக்கம் போல இளம்பெண் நேற்று இரவு 7 மணியளவில் பணியை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் தனது வீட்டிற்கு சென்றிருக்கிறார். அப்போது மற்றொரு இருசக்கர வாகனத்தில் சுரேஷ் மற்றும் சரண் ஆகிய இருவரும் இளம் பெண்ணை பின்தொடர்ந்து சென்றுள்ளனர். தன்னை யாரோ பின்தொடர்வதை தெரிந்து கொண்ட இளம்பெண் இருசக்கர வாகனத்தை எங்கும் நிறுத்தாமல் தனது வீட்டிற்கு அருகில் சென்றவுடன் கத்தி கூச்சலிட்டிருக்கிறார். பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் வெளியில் வந்திருக்கின்றனர்.

இதனை பார்த்து பயந்த வாலிபர்கள் அங்கிருந்து தப்பிச் செல்ல முயற்சித்த நிலையில் இளம் பெண்ணின் அவர்களை பின் தொடர்ந்து சென்றுள்ளனர். எனவே தப்பிக்க நினைத்து வாலிபர்கள் அருகில் இருந்த கிணற்றில் குதித்துள்ளனர். இதனை பார்த்த பெண்ணின் உறவினர்கள் உடனடியாக இதுகுறித்து சுல்தான்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், கிணற்றுக்குள் குதித்த சுரேஷ் மற்றும் சரண் ஆகிய இருவரையும் பத்திரமாக மீட்ட நிலையில் போலீசார் இருவரையும் சுல்தான்பேட்டை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு கைது செய்துள்ளனர். வாலிபர்கள் பெண்ணை பின்தொடர்ந்து வந்து, பிடிபடுவோம் என்ற பயத்தில் கிணற்றுக்குள் குதித்துத் தப்ப முயன்ற இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.