க்ரைம்

ஏ.ஆர்.ரஹ்மான் இசைக் கச்சேரியில் குளறுபடி; நெரிசலில் சிக்கிய முதலமைச்சர் வாகனம்; காரணம் என்ன?

Malaimurasu Seithigal TV

ஏ.ஆர்.ரஹ்மான் இசை கச்சேரியில் ஏற்பட்ட குளறுபடிகள் குறித்து தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜை நேரில் சென்று விசாரணை நடத்த உத்தவிட்டுள்ளதாக டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

சென்னையை அடுத்த பனையூரில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற இருந்தது. மழை காரணமாக அந்த இசை நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. ஏ.ஆர்.ரஹ்மானின் 30 ஆண்டுகால இசைப் பயணத்தை கொண்டாடும் வகையில் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த இசை நிகழ்ச்சியை காண இசை ஆர்வலர்கள் படையெடுத்ததால் கிழக்கு கடற்கரை சாலையில்  போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கு டிக்கெட் வாங்கியவர்கள் செல்ல காலதாமதம் ஏற்பட்டது.  போக்குவரத்து நெரிசல் காரணமாக சிலர் நிகழ்ச்சிக்கு வராமல் அப்படியே வீட்டுக்கு திரும்பி சென்றனர்.

 ஏற்கனவே எடுத்திருந்த டிக்கெட்டுகள் செல்லும் என அறிவிக்கப்பட்டிருந்ததால், அதனை நம்பி ரசிகர்கள் சென்றுள்ளனர். ஆனால் அங்கே அளவுக்கு அதிகமான கூட்டம் இருந்ததால், பாதிக்கும் மேற்பட்ட ரசிகர்களால் நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கே செல்ல முடியத சூழல் ஏற்பட்டுள்ளது.

உள்ளே சென்ற பார்வையாளர்களுக்கு உட்கார எந்தவிதமான இருக்கை வசதிகளும் செய்து கொடுக்கப் படவில்லை என கூறப்படுகிறது. மேலும், பார்க்கிங் வசதியும் சரியாக செய்யவில்லை என்பதால், ஈசிஆர் சாலை முழுவதும் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றவர்கள் மட்டும் இல்லாமல், அப்பகுதியை கடந்து சென்ற பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

700க்கும் அதிகமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தும், வாகன நெரிசலை சமாளிக்க முடியாமல் ஈசிஆர் ஸ்தம்பித்துள்ளது. இசை நிகழ்ச்சி காரணமாக முதல்வர் காண்வாய் வாகனம் போக்குவரத்து நெரிசலில் சிக்கியது. போக்குவரத்து நெரிசல் காரணமாக  முதல்வர் காண்வாய் மெதுவாக ஊர்ந்து சென்றது.

இதையடுத்து நிகழ்ச்சி ஏற்பாட்டளர்களிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக தாம்பரம் காவல் ஆணையரகம் தெரிவித்துள்ளது. போக்குவரத்து நெரிசலை சீர்படுத்தவும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இசை நிகழ்ச்சி ஏற்பாட்டார்களின் குளறுபடியால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக தாம்பரம் காவல் ஆணையரகம் தெரிவித்துள்ளது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசைக் கச்சேரியால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் அனுமதிக்கப்பட்ட 6 ஆயிரம் காரை விட 4 ஆயிரம் கார் கூடுதலாக வந்ததாக தாம்பரம் போலீஸ் கூறியுள்ளது. நிகழ்ச்சி நடத்தப்பட்ட இடம் அருகே கார் பார்க்கிங்கிற்கு 14 ஏக்கர் இடம் ஒதுக்கபப்ட்டுள்ளது. மேலும், பார்க்கிங் வசதிக்காக கூடுதலாக பணம் வசூலிக்கப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் இசை நிகழ்ச்சி பார்க்க வந்தவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் ஆங்காங்கே காரை நிறுத்தியதும் போக்குவரத்து நெரிசலுக்கு காரணம் தெரியவந்துள்ளது.

அனுமதிக்கப்பட்ட டிக்கெட்டின் அளவை விட கூடுதலாக கூடுதலான அளவு டிக்கெட் விற்கப்பட்டுள்ளது. போதிய ஏற்பாடுகளை செய்யாததனாலே இத்தகைய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளரிடம் விசாரணை செய்து வருவதாகவும் தாம்பரம் காவல் ஆணையரகம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழக் டி.ஜி.பி.சங்கர் ஜிவால் இனி வரும் காலங்களில் இது போன்று நடக்காதவாறு நடவடிக்கைகள் மேற்கொள்ள தாம்பரம் காவல் ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் ஏ.ஆர்.ரஹ்மான் இசை கச்சேரியில் ஏற்பட்ட குளறுபடிகள் குறித்து தாம்பரம் காவல் ஆணையர் அமுல்ராஜை நேரில் சென்று விசாரணை நடத்த உத்தவிட்டுள்ளதாகவும்- டிஜிபி சங்கர் ஜிவால் கூறினார். மேலும் அதிக அளவிலான டிக்கெட் விற்பனை நடைப்பெற்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது.  அது தொடர்பாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளரிடம் விசாரணை நடத்தி விரிவான அறிக்கை சமர்பிக்க சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.