நாமக்கல் அருகே மகனுடன் ரகசியமாக வாழ்ந்த இளம் பெண்ணை கொலை செய்து புதைத்த வழக்கில் கணவன், மனைவி இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நாமக்கல் மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
ரகசிய உறவு வைத்திருந்த இளம்பெண்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே உள்ள வில்லிப்பாளையத்தை சேர்ந்தவர் ரவி - தங்கம்மாள் தம்பதி. இந்த தமப்தியின் மகள் செளவுந்தர்யாவுக்கும், செல்லதுரை என்பவருக்கும் திருமணம் ஆகி ஒரு ஆண் குழந்தை இருந்துள்ளது. இதனிடையே, செளந்தர்யாவுக்கும் பரமத்தி வேலூர் பழனியப்பா ஆயில் மில் தெருவை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி மனோகரன் மகன் சூர்யாவுடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.
தேடும் பணியில் போலீசார்:
இந்த நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 14-ந் தேதி செளந்தர்யா மாயமாகியுள்ளார். இதுகுறித்து செளந்தர்யாவின் தாயார் தங்கம்மாள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் செளந்தர்யாவை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இதையும் படிக்க: "திருவாரூர் முத்துவேல் கருணாநிதி எனும் நான்" புத்தகம் வெளியீடு!
வெளிவந்த உண்மை:
பின்னர் விசாரணையில், தனது மகன் சூர்யாவுடன் ரகசிய உறவு வைத்திருக்கும் செளந்தர்யா அவரை விட்டு பிரிந்து செல்லாததால் ஆத்திரமடைந்த சூர்யாவின் பெற்றோர், செளந்தர்யாவை ஆட்டோவில் அழைத்து சென்று கொடூரமாக அடித்து கொலை செய்து பெண்ணின் உடலை தனியார் செங்கல் சூளை ஒன்றில் புதைத்தது தெரியவந்தது.
தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்:
இதையடுத்து சூர்யாவின் பெற்றோர் மனோகரன் மற்றும் சுமதி இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இது தொடர்பான வழக்கு நாமக்கல் மகிளா நீதிமன்றம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் விசிக பிரமுகர் மனோகரன் மற்றும் சுமதிக்கு ஆயுள் தண்டனையும், தலா 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து மகிளா நீதிமன்ற நீதிபதி நந்தினி தீர்ப்பு அளித்தார். இதையடுத்து கணவன், மனைவி இருவரும் கோவை சிறையில் அடைக்கப் பட்டனர்.