க்ரைம்

பிணங்களுடன் ஒரு சொகுசு வாழ்க்கை! 200 உடல்களை அழுகவிட்டு குடும்பத்தினரை ஏமாற்றிய கொடூர இயக்குனர் - அமெரிக்காவை குமட்ட வைக்கும் வழக்கு!

அழுகிக் கொண்டிருந்த வேளையில், அவர்கள் மக்களின் பணத்தில் சுகபோகங்களை அனுபவித்துள்ளனர்...

மாலை முரசு செய்தி குழு

அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் 'ரிட்டர்ன் டு நேச்சர்' (Return to Nature) என்ற மயான காப்பகத்தை ஜான் ஹால்ஃபோர்ட் (46) மற்றும் அவரது மனைவி கேரி ஹால்ஃபோர்ட் (49) ஆகியோர் நடத்தி வந்தனர். இவர்கள் கடந்த நான்கு ஆண்டுகளாக, தங்களை நம்பி ஒப்படைக்கப்பட்ட சுமார் 200 சடலங்களை அடக்கம் செய்யாமலோ அல்லது எரிக்காமலோ, ஒரு கட்டிடத்தில் போட்டு அழுகவிட்டுள்ளனர். இந்த அதிர்ச்சித் தகவல் வெளிவந்ததையடுத்து, ஜான் ஹால்ஃபோர்டிற்கு 40 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே மோசடி வழக்குகளுக்காக அவர் 20 ஆண்டு சிறைத்தண்டனை அனுபவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கை விசாரித்த கொலராடோ மாவட்ட நீதிமன்ற நீதிபதி எரிக் பென்ட்லி தீர்ப்பளிக்கும் போது, "இந்த வழக்கை ஒவ்வொரு முறை நான் விசாரிக்கும் போதெல்லாம், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழைக்கப்பட்ட தீங்கின் அளவைக் கண்டு நான் நிலைகுலைந்து போகிறேன். இது ஒரு சாதாரணமான பாதிப்பு அல்ல. ஒவ்வொரு மனிதனும் அடிப்படையில் நல்லவன் என்று நான் நம்புகிறேன், ஆனால் ஹால்ஃபோர்ட் செய்த குற்றங்கள் அந்த நம்பிக்கையையே சோதிக்கின்றன" என்று மிகவும் வேதனையுடன் குறிப்பிட்டார். பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் நீதிமன்றத்தில் சாட்சியமளிக்கும் போது, புழுக்கள் நெளியும் தங்கள் உறவினர்களின் அழுகிய உடல்களைப் பற்றிய கனவுகள் தங்களை இன்றும் வாட்டுவதாகக் கூறி கதறினர். ஜானை ஒரு "அரக்கன்" என்று வர்ணித்த அவர்கள், அவருக்கு அதிகபட்சமாக 50 ஆண்டுகள் தண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

2019 முதல் 2023 வரை பென்ரோஸ் என்ற சிறிய நகரத்தில் உள்ள ஒரு கட்டிடத்தில் இந்த உடல்கள் வைக்கப்பட்டிருந்தன. அந்தப் பகுதியிலிருந்து வீசிய சகிக்க முடியாத துர்நாற்றம் குறித்து பொதுமக்கள் புகார் அளித்ததைத் தொடர்ந்து, 2023 நவம்பர் 8 அன்று போலீசார் அங்குச் சோதனையிட்டனர். அப்போது அங்கு மலைபோல் குவிந்து கிடந்த சடலங்களைக் கண்டு அதிகாரிகள் உறைந்து போயினர். உடல்களை அவமதித்தல், திருட்டு, பணமோசடி மற்றும் போலி ஆவணங்கள் தயாரித்தல் போன்ற பல்வேறு பிரிவுகளின் கீழ் தம்பதியினர் கைது செய்யப்பட்டனர். பல மாத போராட்டத்திற்குப் பிறகு, கைரேகைகள் மற்றும் டிஎன்ஏ சோதனைகள் மூலம் அந்த உடல்கள் யாருடையவை என்பது அடையாளம் காணப்பட்டது.

இந்தக் கொடூரத்தின் உச்சமாக, சடலங்களை எரித்துவிட்டதாகக் கூறி, சாம்பலுக்குப் பதிலாக காய்ந்த சிமெண்ட் பொடியை குடும்பத்தினரிடம் தந்து அந்தத் தம்பதி ஏமாற்றியுள்ளனர். இவ்வாறு பொதுமக்களை ஏமாற்றிப் பெற்ற பணத்தைக் கொண்டு ஜான் மற்றும் அவரது மனைவி மிகச் சொகுசான வாழ்க்கையை வாழ்ந்துள்ளனர். குச்சி (Gucci) மற்றும் டிஃபானி (Tiffany & Co.) போன்ற விலையுயர்ந்த நிறுவனங்களில் ஆடம்பரப் பொருட்களை வாங்கியதுடன், கிரிப்டோகரன்சியிலும் முதலீடு செய்துள்ளனர். உடல்கள் அழுகிக் கொண்டிருந்த வேளையில், அவர்கள் மக்களின் பணத்தில் சுகபோகங்களை அனுபவித்துள்ளனர்.

நீதிமன்றத்தில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட ஜான், "எல்லாவற்றையும் நிறுத்திவிட்டு வெளியேற எனக்குப் பல வாய்ப்புகள் இருந்தன, ஆனால் நான் அதைச் செய்யவில்லை. நான் செய்த தவறுகள் வரும் தலைமுறை வரை எதிரொலிக்கும். நான் செய்த அனைத்தும் தவறானவை" என்று உருக்கமாகப் பேசினார். இதற்கிடையில், இந்த வழக்கில் தொடர்புடைய ஜானின் மனைவி கேரிக்கு வரும் ஏப்ரல் 24 அன்று தண்டனை விவரம் அறிவிக்கப்பட உள்ளது. அவருக்கு 25 முதல் 35 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.