க்ரைம்

தத்தெடுத்த குழந்தையை தாயிடமே ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவு!!

Malaimurasu Seithigal TV

உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கட்டாயமாக குழந்தையை தத்தெடுத்து சென்றதாக தொடரப்பட்ட வழக்கில் குழந்தையை தாயிடம் ஒப்படைக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

மதுரையை சேர்ந்த ராஜாத்தி நாகமணி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, கடந்த 2022 ம் ஆண்டு நவம்பர் மாதம் ராஜாத்தி நாகமணி, பாலமுருகன் தம்பதிக்கு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது. ராஜாத்தி நாகமணி, குருவம்மாள் என்பவரிடம் இருந்து 1 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் கடனாக பெற்றுள்ளார். இதனை பயன்படுத்திக்கொண்ட குருவம்மாள் குழந்தையை கட்டாயப்படுத்தி தத்தெடுத்துச் சென்றுள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தனது குழந்தையை கட்டாயப்படுத்தி தத்தெடுப்பு பத்திரதில் கையெழுத்து வாங்கி பத்திர பதிவு அலுவலகத்தில் பதிவு செய்ததாகவும், கட்டாயப்படுத்தி தனது குழந்தையை வாங்கி சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறையிடம் புகார் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், குழந்தையை மீட்டு தன்னிடம் ஒப்படைக்கவும், பத்திர பதிவு செய்த அதிகாரிகள் மற்றும் புகார் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியுள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், நிர்மல் குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது, அப்போது மனுதாரர் இடமிருந்து கட்டாயப்படுத்தி குழந்தையை பணம் கொடுத்து எடுத்து சென்றுள்ளது நிரூபணம் ஆகியுள்ளது, மேலும் தத்தெடுப்பு பத்திரமாக பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளது சட்ட விரோதமான செயலாகும் எனக் கூறியுள்ளனர்.

மேலும், இது போன்ற குழந்தை தத்தெடுப்பு செயல்களை குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வழக்கில் பத்திரப்பதிவு ஐ.ஜி யை எதிர் மனுதரராக சேர்த்து, எதன் அடிப்படையில் சட்டவிரோதமாக குழந்தை தத்தெடுப்பு பத்திரத்தை பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்தனர் என்பதை குறித்து பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்ட்டுள்ளனர்.

மேலும் குழந்தையை தாயிடம் ஒப்படைக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை செப்டம்பர் 5ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்