க்ரைம்

விபத்தில் சிக்கிய டிடிஎஃப் வாசனை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு...!

Tamil Selvi Selvakumar

பைக் சாகசம் செய்து விபத்தில் சிக்கிய பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் கைது செய்யப்பட்டு காஞ்சிபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டதை தொடர்ந்து, அக்டோபர் 3ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

விலையுயர்ந்த இருசக்கர வாகனங்களை நீண்ட தூரம் வேகமாக இயக்கியும், வீலிங் சாகசம் செய்தும் அதனை வீடியோவாக யூடியூபில் பதிவிட்டு பிரபலமானார் டிடிஎஃப் வாசன். இவர் மீது வேகமாக வாகனத்தை ஓட்டுவது, விபத்தை ஏற்படுத்துவது போல் வீலிங் செய்வது உள்ளிட்ட பல புகார்கள் எழுந்துள்ளது. இந்நிலையில், சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரத்தை அடுத்த பாலுசெட்டிசத்திரம் பகுதியில், இருசக்கர வாகனத்தில் சென்ற டிடிஎஃப் வாசன் சாகசம் செய்த போது  தூக்கிவீசப்பட்டு கை-யில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார், டிடிஎஃப் வாசன் மீது உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனம் இயக்கியது, கவனக்குறைவாக செயல்படுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில், டிடிஎப் வாசனின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய தமிழ்நாடு போக்குவரத்துறை பரிந்துரை செய்துள்ளது. இதனை தொடர்ந்து, மேலும் இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த காஞ்சிபுரம் போலீசார், டிடிஎஃப் வாசனை அதிரடியாக கைது செய்தனர். காஞ்சிபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டதை தொடர்ந்து, அக்டோபர் 3ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி இனியா கருணாகரன் உத்தரவிட்டுள்ளார். 

இதனை தொடர்ந்து காஞ்சிபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் யூ டியூபர் TTF வாசன் ஆஜர் படுத்தப்பட்டார். பின்னர் நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தான் ஸ்டண்ட் செய்யவில்லை என்றும், இது எதிர்பாராத விபத்து என்றும் தெரிவித்தார்.