கடலூர் மாவட்டம், அதர் நத்தம் கிராமத்தை சேர்ந்த இளையராஜா என்பவருக்கும் வெற்றிச்செல்வி என்பவருக்கும் திருமணமாகி, இரண்டு குழந்தைகள் உள்ளனர். இளையராஜா வெளிநாட்டில் வேலை செய்து வந்த நிலையில், சொந்த ஊரில் வீடு கட்டியதாக கூறப்படுகிறது. வீடு கட்டுவதற்காக வெற்றிச்செல்வி தனது தாய் வீட்டார் மூலம் ரூ.5 லட்சம் கடன் வாங்கி கொடுத்ததாக தெரிகிறது. இதற்கிடையே, கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டதாகவும், இதுகுறித்து வெற்றிச்செல்வி தனது கணவரிடம் தொடர்ந்து தெரிவித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் இளையராஜா வெளிநாட்டில் இருந்தபோது, இருவருக்கும் இடையே செல்போன் மூலம் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.
சுமார் 4 மாதங்களுக்கு முன்பு இளையராஜா சொந்த ஊருக்கு திரும்பிய நிலையில், மீண்டும் பணம் தொடர்பாக கணவன், மனைவிக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கோபமடைந்த வெற்றிச்செல்வி, கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தனது தாய் வீடான அதர்நத்தம் கிராமத்திற்கு சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இன்று காலை பெரிய அரிவாளுடன் அதர்நத்தம் கிராமத்திற்கு சென்ற இளையராஜா, வெற்றிச்செல்வியின் வீட்டிற்குள் மறைந்திருந்ததாக தெரிகிறது. குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு வெற்றிச்செல்வி வீட்டிற்கு திரும்பிய போது, மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவரை இளையராஜா சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது.
தாக்குதலை தடுக்க முயன்றபோது வெற்றிச்செல்வியின் கைவிரல் ஒன்று துண்டாகி கீழே விழுந்ததாகவும், மேலும் தலை, கை மற்றும் உடலின் பல்வேறு பகுதிகளில் வெட்டுக்காயங்கள் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்த நிலையில், இளையராஜா அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. படுகாயமடைந்த வெற்றிச்செல்வியை பொதுமக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு முதலுதவி மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், மேல் சிகிச்சைக்காக அரியலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து தகவலறிந்த ராமநத்தம் போலீசார் இளையராஜாவை பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். பணம் தொடர்பான குடும்பத் தகராறில் கணவர், மனைவியை அரிவாளால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.