கடலூர் மாவட்டம், பண்ருட்டி சேக்கிழார் தெருவை சேர்ந்தவர் மல்லிகா என்பவற்றின் மகன் டேவிட். இவருக்கும் வேலூர் பகுதியை சேர்ந்த ராஜலட்சுமி என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணமான நிலையில் இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இளைய மகனுக்கு மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் தந்தை டேவிட் கூலி வேலை செய்து மூத்த மகனை படிக்க வைத்துள்ளார். ஆனால் விஜய் சரியாக படிப்பு வரவில்லை என படிப்பை நிறுத்திவிட்டு அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு வேலைக்கு சென்று வந்தார்.
பின்னர் கணவர் டேவிட் உயிரிழந்த நிலையில் ராஜலட்சுமி அவரது மாமியார் மற்றும் இரண்டு மகன்களுடன் வசித்து வந்தார். ராஜலட்சுமி கூலி வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றி வந்த நிலையில் மூத்த மகன் விஜய் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். மேலும் கஞ்சா பிடிப்பது போன்ற தேவையற்ற பழக்கங்களுக்கு அடிமையாகி வேலைக்கு செல்லாமல் நண்பர்களுடன் ஊர் சுற்றி வந்திருக்கிறார். மேலும் குடித்துவிட்டு வந்து தனது தாய், பாட்டி மற்றும் சகோதரனை அடித்து துன்புறுத்தியதாக சொல்லப்படுகிறது.
இதனால் தாய் மற்றும் மகனுக்கு இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. தினந்தோறும் குடித்துவிட்டு வீட்டிற்கு செல்லும் விஜய் தொடர்ந்து ரஜலட்சுமியிடம் தகராறு செய்து வந்த நிலையில் ஒரு கட்டத்திற்கு மேல் விஜயிடம் சொல்லாமல் தனது இளைய மகனை அழைத்துக்கொண்டு அவரது தாய் வீட்டிற்கு சென்றிருக்கிறார். அதையும் பொருட்படுத்தாமல் விஜய் வழக்கமாக குடித்துவிட்டு வீட்டின் அக்கம் பக்கத்தில் இருக்கும் குடும்பங்களிடம் பிரச்சனை செய்து வந்திருக்கிறார்.
இதனை அறிந்து நேற்று முன்தினம் வீட்டிற்கு வந்த ராஜலட்சுமி நண்பர்களுடன் இருந்த விஜயை வீட்டிற்கு அழைத்து அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த விஜய் சமையலறையில் இருந்த ஓவனை எடுத்து தனது தாயின் தலையில் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த ராஜலட்சுமி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் மிதந்து உயிரிழந்தார். பின்னர் ராஜலட்சுமியை பார்த்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ராஜலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்த போலீசார் விஜய் மீது வழக்கு பதிவு செய்து அவரை தனிப்படை அமைத்து கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். பெற்ற மகனே தாயை அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.