Deva Music Composer Funeral 
க்ரைம்

“ஓட ஓட வெட்டிக் கொல்லப்பட்ட சுள்ளான் மதன்” - பழிக்கு பழியாக திட்டமிட்டு கொலையா?.. கரும்பு காட்டில் தெறித்த ரத்தம்!

மதன் கருப்பு காட்டிற்குள் ஓடிய நிலையில் மர்ம கும்பல் விடாமல் ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டியுள்ளனர்...

Mahalakshmi Somasundaram

சிவகங்கை மாவட்டம், ஒக்கூர் அருகே வடமாடு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியைக் காண வந்த பிரபல ரவுடி சுள்ளான் மதன், மர்ம நபர்களால் விரட்டிச் சென்று சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் பட்டப்பகலில் நடைபெற்ற இந்தக் கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை அருகே உள்ள புதுப்பட்டியைச் சேர்ந்தவர் 26 மதன். இவர் சுள்ளான் மதன் என்ற பெயரில் அறியப்பட்டு வந்தார். இவர் மீது 14 க்கும் மேற்பட்ட கொலை மற்றும் குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கொல்லங்குடியில் நடைபெற்ற அண்ணா தம்பியான ஜெயசூர்யா மற்றும் சுபாஷ் இரட்டை கொலை வழக்கிலும் இவருக்குத் முக்கிய தொடர்பு இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், சமீபத்தில் சிறையிலிருந்து ஜாமினில் வெளியே வந்த மதன், இன்று (அக் 18) ஒக்கூர் அருகே மேலமங்கலத்தில் நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியைக் காண சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள், அரிவாளுடன் மதனை நோக்கிச் சென்று அவரை விரட்டியுள்ளனர். அவர்களிடம் தப்பிக்க முயற்சித்த மதன் கருப்பு காட்டிற்குள் ஓடிய நிலையில் மர்ம கும்பல் விடாமல் ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டியுள்ளனர். இதனால் வடமாடு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெற்ற பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

murder spot.

சம்பவம் குறித்துத் தகவலறிந்த சிவகங்கை தாலுகா காவல் நிலைய போலீசார் உடனடியாக அங்கு விரைந்து சென்றனர். சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்ட போலீசார், மதனின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தக் கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதன் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலையில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் நபர்களைக் கண்டறிந்து, சம்பவத்தின் பின்னணியை வெளிக்கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வடமாடு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியைக் காண வந்த சுள்ளான் மதன், பட்டப்பகலில் விரட்டிச் சென்று வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் சிவகங்கை மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.