திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 70 வயது மூதாட்டி தனது தோட்டத்தில் தனியாக வசித்து வந்துள்ளார். மூதாட்டி விவசாயம் தொழில் மற்றும் கால்நடைகளை வளர்த்து வந்தார். இவரது மகன்கள் வெளியூரில் வசிப்பதால் மூதாட்டி மட்டும் தனியாக தோட்டத்து வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் மூதாட்டி மட்டும் தனியாக வசிப்பதை நோட்டமிட்ட வாலிபர் ஒருவர் நேற்று அதிகாலையில் மூதாட்டியின் வீட்டிற்குள் புகுந்துள்ளார்.
அதன் பிறகு வீட்டின் கதவை சாத்திவிட்டு அந்த வாலிபர் மூதாட்டியை கொடூரமாக தாக்கி, பின் வாயில் துணியை வைத்து அடைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அப்போது மூதாட்டியின் தோட்டத்திற்கு உள்ளூர் பால்காரர் ஒருவர் பால் கறக்க வந்துள்ளார். இதனைக்கண்ட வாலிபர் வீட்டில் இருந்து தப்பி ஓடி உள்ளார். மூதாட்டியின் வீட்டில் இருந்து தப்பி செல்வதை பார்த்த பால்காரர் சந்தேகத்தில் கூச்சலிட்டுள்ளார். அப்போது ஊர் மக்கள் அவரை விரட்டி பிடித்து கட்டி வைத்து தாக்கி உள்ளனர்.
அதன் பின்னர் காயமடைந்த மூதாட்டியை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு மூதாட்டிக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவல் அறிந்த வடமதுரை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, விசாரணை நடத்தியதில் அந்த வாலிபர் அய்யலூர் பாலம் பூசாரியூர் பகுதியைச் சேர்ந்த தேங்காய் வெட்டும் தொழிலாளி பால்சாமி (27), என்பது தெரியவந்தது. இவர் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி என்றும் இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளதும் விசாரணையில் தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து போலீசார் பால்சாமியை மீட்டு வடமதுரை காவல் நிலையம் கொண்டு சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 70 வயது மூதாட்டியை வாலிபர் ஒருவர் வீட்டிற்குள் நுழைந்து பலாத்காரம் செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்