க்ரைம்

ஆசிரமத்தில் சிபிசிஐடி விசாரணையில் மாட்டிய முக்கிய ஆவணங்கள்...!

Tamil Selvi Selvakumar

விக்கிரவாண்டி அருகே உள்ள அன்பு ஜோதி ஆசிரமத்தில் நடைபெற்ற சி.பி.சி.ஐ.டி. சோதனையில் முக்கிய ஆவணங்கள் மற்றும் சவுக்கு கட்டை, ரத்த கரை படிந்த பாய் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன. 

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே குண்டலபுலியூரில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக அன்பு ஜோதி ஆசிரமம் செயல்பட்டு வருகிறது. இங்கு பராமரிக்கப்பட்டு வந்த சத்தியமங்கலத்தைச் சேர்ந்த ஜாபருல்லா என்பவர் காணாமல் போனதாக அவரது உறவினர் புகார் தெரிவித்த நிலையில், கடந்த 10-ம் தேதி போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. 

அதில், அனுமதியின்றி ஆசிரமம் நடைபெற்று வந்ததும், இங்குள்ள மனநலம் பாதிக்கப்பட்டோர், ஆதரவற்றோர், மாற்றுத் திறனாளிகள் அடித்து துன்புறுத்தியதும், பெண்களுக்கு பாலியல் தொல்லை நடந்ததும் தெரியவந்தது. மேலும், 20 க்கும் மேற்பட்டோர் மாயமாகி இருந்ததும் தெரியவந்தது. 

இதனையடுத்து ஆசிரம நிர்வாகி அன்பு ஜூபின் பேபி, அவரது மனைவி மரியா ஜூபின் உள்ளிட்ட 8 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி.  போலீசாருக்கு மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி, இன்று சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி. அருண் பாலகுமாரன் தலைமையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஆசிரமத்தில் சோதனை மேற்கொண்டபோது, பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.

மேலும் மனநலம் பாதித்தோரை அடிக்க பயன்படுத்திய சவுக்கு கட்டை, ரத்தக்கறை படிந்த பாய் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளதாக  எஸ்.பி. அருண் பாலகுமாரன் தெரிவித்தார்.