க்ரைம்

பேருந்து நிழற்குடையை ஆக்கிரமித்த திமுக பேனர்... பயணிகள் அவதி!!

Malaimurasu Seithigal TV

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில், பயணிகள் நிழற்குடையை மறைத்து திமுகவினர் விளம்பர பேனர் வைத்துள்ளதால் பயணிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் - ராஜபாளையம் செல்லும் மெயின் சாலையில் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் அமரும் வகையில் பேருந்து நிழற்குடை ஓன்று அமைக்கப்பட்டுள்ளது. அருகில் உள்ள கிராமங்கள் மற்றும் மதுரை சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லக்கூடிய பயணிகள் இந்த நிழற்குடையை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், இந்த நிழற்குடையின் முன் பக்கம் முழுவதும் திமுக வினர் ஆக்கிரமித்து, பிரம்மாண்ட பிளக்ஸ் பேனர் ஒன்றை வைத்துள்ளது, பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திமுக கட்சியின் சார்பில் புதிதாக பொருப்பு வழங்கப்பட்ட நிர்வாகிகள் தலைமைக்கு, நன்றியை தெரிவிப்பதாக கூறி மிகப்பெரிய அளவில் விளம்பர பேனர் ஒன்று வைத்துள்ளனர்.

பயணிகள் நிழற்குடையின் முகப்பு முழுவதையும் அடைத்து, பேனரை வைத்துள்ளதால், அங்கு பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் உள்ளே செல்ல முடியாமல் அவதிப்பட்டுள்ளனர். மேலும், விளம்பரப் பலகையை எந்த பிடிமானமும் இல்லாமல் சாய்த்து வைத்திருப்பதால், எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் அபாயம் இருப்பதால், அச்சத்துடனே  நின்று வருகின்றனர். மேலும் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் தங்கள் மீது விழுந்து விடுமோ என்ற  அச்சத்துடனே அப்பகுதியை கடந்து செல்கின்றனர்.

திமுக தலைமை பொது இடங்களில் பிளக்ஸ் பேனர்கள் வைக்க மாட்டோம் என பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ள நிலையில், அவர்களே நிழற்குடையை மறைத்து விளம்பர பலகை வைத்த சம்பவம் பரபரப்பையும் எரிச்சலையும் ஏற்படுத்தி உள்ளது. எனவே நிழற்குடைய மறைத்து விளம்பர பேனர் வைத்த திமுக நிர்வாகி மீது உடனடி சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.