க்ரைம்

"அமைச்சர் செந்தில் பாலாஜியை சட்டவிரோதமாக கைது செய்யவில்லை" அமலாக்கத்துறை பதில்!

Malaimurasu Seithigal TV

அமைச்சர் செந்தில் பாலாஜியை சட்டவிரோதமாக கைது செய்யவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை பதில் மனுத் தாக்கல் செய்துள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா, சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், தமது கணவருக்கு எதிராக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வெறுப்பை வளர்த்து வருவதாகவும், செந்தில் பாலாஜியை நீதிமன்ற காவலில் வைத்தது சட்டவிரோதமானது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் அவரை நீதிமன்ற காவலில் வைக்க மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரியும், அவரை விடுவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருந்தார்.

இதற்கு பதில் மனு தாக்கல் செய்த அமலாக்கத்துறை, ஜூன் 13ஆம் தேதி நடந்த சோதனையில் செந்தில் பாலாஜி உடன் இருந்ததாகவும், அவரை சட்டவிரோதமாக சிறை பிடிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் கைது நடவடிக்கைக்கான சம்மனை பெற மறுத்த செந்தில் பாலாஜி அதிகாரிகளை மிரட்டும் தொனியில் நடந்து கொண்டதாகவும், விசாரணைக்கு ஒத்துழைக்காததால் கடைசி நடவடிக்கையாக அவர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கபட்டது.

இதுகுறித்து செந்தில் பாலாஜியின் குடும்பத்தினருக்கு குறுஞ்செய்தி, மின்னஞ்சல் மூலம் தகவலளிக்கப் பட்டதாகவும், சாட்சிகளை கலைத்து ஆதாரங்களை அழிக்க வாய்ப்பு இருந்ததால்தான் அவர் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது. மேலும் பணப்பரிமாற்றம் தொடர்பாக எந்த விளக்கமும் செந்தில் பாலாஜி தரப்பில் அளிக்கப்படவில்லை எனவும், அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால் இதுவரை காவலில் எடுத்து விசாரிக்கவில்லை எனவும் அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளது. 

இதையும் படிக்க