ஈரோடு மாவட்டம், பவானி மீன் மார்க்கெட் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் குழந்தை கடத்தி கொண்டு வந்து விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது என்ற ரகசிய தகவல் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு கிடைத்தது. இந்த தகவலை வைத்து துரிதமாக செயல்பட்ட பவானி போலீசார், ஈரோடு சைல்டு லைன் அதிகாரிகளுடன் இணைந்து குழந்தை இருப்பதாக சொல்லப்பட்ட வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு பிறந்து 10 நாட்களே ஆன பெண் குழந்தை இருப்பது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து அந்த வீட்டில் வசித்து வந்த 21 வயதுடைய பிரவீன் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது மும்பையில் பிறந்த 10 நாள் பெண் குழந்தையை இரண்டு பெண்கள் பவானிக்கு கொண்டு வந்து, விற்பனைக்காக பிரவீனிடம் ஒப்படைத்தது உறுதி செய்யப்பட்டது. மேலும் பெற்றோர்களுக்கு பணத்தாசை காட்டி மூளைச் சலவை செய்து வாங்கி வந்தார்களா? அல்லது பெற்றோர்களுக்கு தெரியாமல் நேரடியாக கடத்தி வந்தார்களா?என்பதையும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
மீட்கப்பட்ட குழந்தையை அருகில் உள்ள பாதுகாப்பு இல்லத்தில் ஒப்படைத்துள்ளனர். இதையடுத்து பிரவீன் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். மேலும் குழந்தையை பவானிக்கு கொண்டு வந்த இரு பெண்களை பிடிக்க பவானி காவல்துறை அதிகாரிகள் தனிப்படை அமைத்து தற்போது மும்பைக்கு விரைந்து சென்றுள்ளனர். இதற்கு முன்பும்,
பெங்களூரில் இருந்து 8 மாத பெண் குழந்தை கடத்தி வந்த வழக்கில் இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டு சித்தோடு பகுதியில் ஆந்திராவைச் சேர்ந்த தொழிலாளர்களின் 1.5 வயது பெண் குழந்தை 25 நாட்களில் மீட்கப்பட்ட நிலையில் தற்போது அதே பணியில் மீண்டும் ஒரு பெண் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எனேவ ஏற்கனவே குழந்தை கடத்தலில் ஈடுபட்ட பெண்களுக்கும் இந்த கடத்தலுக்கு தொடர்பு உள்ளதா எனவும் அல்லது ஒரு கும்பலாக செயல்பட்டு இது போல பிறந்த பச்சிளம் பெண் குழந்தைகளை கடத்தி விற்பனை செய்கின்றனரா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.