ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள சோலையம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியம் (வயது 68), விவசாயியான இவர் தனது தோட்டத்தில் தனியாக வசித்து வந்தார். இவருக்கு 3 மகன்களும் ஒரு மகளும் உள்ள நிலையில், மனைவி வெளியூரில் தனது மூத்த மகனுடன் தங்கி வேலை பார்க்க சென்றுள்ளார். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி இரவு, வெளியூரில் இருந்த அவரது மகள் ராதா தந்தை சுப்பிரமணியத்துக்கு பலமுறை தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர், அக்கம் பக்கத்தினருக்கு தகவல் கொடுத்து சுப்பிரமணியத்தை தேடி பார்க்குமாறு கேட்டுள்ளனர். பின்னர் பக்கத்து வீட்டினர் சென்று தேடியபோது, தோட்டத்து கிணற்று மேட்டில் சுப்பிரமணியத்தின் துண்டும், செருப்பும் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து டார்ச் லைட் வெளிச்சத்தில் கிணற்றுக்குள் எட்டிப் பார்த்தபோது, சுப்பிரமணியம் சடலமாக மிதப்பது தெரியவந்தது.
உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரது மகள் மற்றும் மகன்களுக்கு தகவல் கொடுத்ததுடன் அருகில் உள்ள பவானி காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த பவானி காவல்துறையினர், உடலை கைப்பற்றி பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். தந்தையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சுப்பிரமணியத்தின் குடும்பத்தினர் கொடுத்த புகாரின் பேரில், பவானி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, கிணற்று மேட்டில் இருந்த கைரேகைகள் உள்ளிட்ட முக்கிய தடயங்களை சேகரித்தனர். பவானி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சீதாலட்சுமி உத்தரவின் பேரில் தண்ணீரில் மூழ்கி சந்தேகத்திற்குரிய வகையில் முதியவர் சுப்பிரமணியம் உயிரிழந்தார் என வழக்கு பதிவு செய்யப்பட்டு சந்தேக வழக்காக போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், முதியவர் சுப்பிரமணியம் கொலை செய்யப்பட்டது வெளியானது.
போலீசார் நடத்திய முழு விசாரணையில், அதே ஊரைச் சேர்ந்த செல்லாயி (வயது 56) என்பவர் வளர்த்து வரும் பத்துக்கு மேற்பட்ட ஆடுகள் சுப்பிரமணியத்தின் விவசாய தோட்டத்தினருகே மேய்த்த போது ஆடுகள், சுப்பிரமணியனின் தோட்டத்திற்குள் புகுந்து வயலில் பயிரிட்டு இருந்த சோளப்பயிரை மேய்ந்துள்ளன. இதனைப் பார்த்த தோட்டத்தின் உரிமையாளரான சுப்பிரமணியன் ஆடு மேச்சலில் ஈடுபட்டிருந்த செல்லாயியைத் திட்டியுள்ளார். இந்த நிலையில் சுப்பிரமணியத்தின் உறவினரும், அதே பகுதியை சேர்ந்தவருமான மாரியப்பன் (வயது 56) என்பவருடன் கள்ளத்தொடர்பில் இருந்து வந்த செல்லாயி, பயிர்களை ஆடு மேய்ந்ததால் சுப்ரமணியம் தன்னை திட்டியதாக முறையிட்டுள்ளார்.
இதையடுத்து, அன்று இரவே இருவரும் சேர்ந்து, விவசாயத் தோட்டத்தில் சுப்பிரமணியம் இருப்பதை அறிந்து கொண்டு அங்கு சென்று கிணற்று மேட்டில் அமர்ந்திருந்த முதியவர் சுப்பிரமணியிடம் வாக்குவாதம் செய்துள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில் கைகளப்பாக மாறி மாரியப்பன் திடீரென சுப்பிரமணியத்தை கிணற்றை நோக்கி தள்ள கிணற்று திட்டில் தலை மோதி ரத்தம் வடிய அப்படியே கிணற்றுக்குள் சுப்பிரமணியம் விழுந்துள்ளார். தலையில் பலத்த காயம் அடைந்து கிணற்றில் விழுந்த சுப்பிரமணியன் கிணற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில் சுப்பிரமணியன் உயிரிழந்ததை உறுதி செய்த மாரியப்பன் மற்றும் அவருடைய கள்ளக் காதலியான செல்லாயி இருவரும் அங்கிருந்து தங்களுடைய வீட்டிற்கு சென்றுள்ளனர். வீட்டிற்கு சென்ற சிறிது நிமிடங்களிலேயே கிணற்றில் மூழ்கி உயிரிழந்த சுப்பிரமணியத்தின் மகள் ராதா மாரியப்பனுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார். “அப்பாவுக்கு போன் பண்ண.. ஆனா அவர் போனை எடுக்கல எனக்கு ஏதோ சந்தேகமாக இருக்கு, நீங்கள் அவர் எங்கு இருக்கிறார் என்று பாருங்கள்” என்று கேட்டுள்ளார். அக்கம் பக்கத்தினர் உடன் சேர்ந்து மாரியப்பன் மற்றும் செல்லாயி ஆகிய இருவரும் கிணற்றுப் பக்கம் சென்று உள்ளனர். மேலும் சுப்பிரமணியன் உயிரிழந்த தகவலையும் அவருடைய மகள் ராதாவிற்கு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் பவானி போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் தகவல் அறிந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த நிலையில் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தனியார் ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கும் வரை அதே பகுதியில் கள்ளக் காதல் ஜோடிகள் இருவருமே ஒன்றும் தெரியாதது போல நாடகமாடி கொண்டிருந்துது போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
ஆரம்பத்தில் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது கொலை வழக்காக பவானி போலீசார் வழக்கை மாற்றி பதிவு செய்து, மாரியப்பன் மற்றும் செல்லாயி ஆகிய இருவரையும் கைது செய்து பவானி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிபதி உத்தரவின் பெயரில் நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.