தனிப்பட்ட தகராறைத் தீர்க்க நடைபெற்ற நள்ளிரவு சந்திப்பு துயரமாக முடிந்த சம்பவம் நொய்டாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண் தோழியுடன் சென்ற இளைஞர் ஒருவர், வீட்டு மூன்றாவது மாடியில் இருந்து குதித்ததில் உயிரிழந்துள்ளார். அவருடன் இருந்த பெண் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவம் நொய்டா பகுதியில் உள்ள சௌரா ரகுநாத்பூர் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை நடைபெற்றது.
விசாரணையில், ஹிதேஷ் ராணா மற்றும் அவரது மனைவி சஞ்சல் ராணா இருவரும் அந்த குடியிருப்பில் தனியாக வசித்து வந்துள்ளனர். சஞ்சல் ராணா திருமணத்திற்கு முன்பே ஒருவரை காதலித்து வந்துள்ளார். திருமணத்திற்குப் பிறகும் அந்த இளைஞர் தொடர்பில் இருந்ததாகவும், இதனால் குடும்பத்தில் நீண்ட நாளாக சண்டை நிலவியதாகவும் தெரியவந்துள்ளது. ஆண் நண்பருடன் திருமணத்தை மீறிய உறவை தவிர்த்து கொள்ளுமாறு கணவன் பல முறை எச்சரித்துள்ளார்.
இந்நிலையில் உயிரிழந்த இளைஞர் தனது வேறு ஒரு பெண் தோழியுடன் ஹிதேஷ் ராணாவின் வீட்டிற்கு வந்துள்ளார். ஹிதேஷ் ராணாவிடம் மன்னிப்பு கேட்பதற்காகவே அவர்கள் அங்கு சென்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், வீட்டில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதையடுத்து, ஹிதேஷ் ராணா மற்றும் அவரது மனைவி சேர்ந்து அந்த இளைஞரையும், அவருடன் வந்த பெண்ணையும் தாக்கியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஹாக்கி மட்டையால் தாக்கப்பட்ட இருவரும் பின்னர் மூன்றாவது மாடியில் உள்ள அறையில் அடைத்து வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதிகாலை சுமார் 3 மணியளவில், அறைக்குள் அடைக்கப்பட்டிருந்த இருவரும் அங்கிருந்து தப்பிக்க முயன்றபோது மூன்றாவது மாடியில் இருந்து குதித்ததாக காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். மேலும் தாக்குதல் நடைபெறுமோ என்ற அச்சத்திலேயே அவர்கள் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
கடுமையாக காயமடைந்த இளைஞர் பின்னர் உயிரிழந்தார். அவருடன் இருந்த பெண் தற்போது டெல்லியில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த வழக்கில் ஆரம்ப வாக்குமூலங்களில் முரண்பாடுகள் இருந்ததால், சஞ்சல் ராணா மற்றும் ஹிதேஷ் ராணா ஆகியோரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். பின்னர் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.