நேற்று வடலூர் அருகே பாதி உடல் புதைந்த நிலையில் முகம் சிதைந்த நிலையில் அடையாளம் தெரியாத இளம் பெண் உடல் காவல் துறையால் மீட்கப்பட்டது. கடலூர் மாவட்டம் வடலூரில் இருந்து நெய்வேலி செல்லும் சாலையில் கண்ணுத்தோப்பு என்ற இடத்தில் புறவழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் சாலையின் அருகே அதிக அளவு மண் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் முகம் சிதைந்த நிலையில் 30 வயது மதிக்கத்தக்க இளம் பெண் உடல் பாதி புதைந்த நிலையில் கிடந்துள்ளது.
அப்பகுதி பொதுமக்கள் இதுகுறித்து வடலூர் காவல் நிலையத்திற்கு அளித்த தகவல் அடிப்படையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணையை தொடங்கினர். முகம் சிதைந்த நிலையில் இருந்து அந்த பெண்ணின் உடல், இறந்து இரண்டு நாட்கள் ஆகி இருக்கலாம் எனவும் கொலை செய்யப்பட்டாரா? அல்லது பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார? என பல்வேறு கோணங்களில் கடலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். சம்பவ இடத்திலிருந்து அந்த பெண்ணின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இரண்டு நாட்களாக நடந்த விசாரணையில் கொலை செய்யப்பட்ட பெண் வடலூர் ஓபிஆர் நகர் பகுதியைச் சேர்ந்த மஞ்சுளா என்பது தெரிய வந்தது. இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின் பேரில் காவல்துறையினர் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் கொலை செய்யப்பட்ட மஞ்சுளாவுக்கும் நெய்வேலி அருகே உள்ள சேப்பளாநத்தம் பகுதியை சேர்ந்த சம்பத் என்பவருக்கும் திருமணத்தை மீறிய தகாத உறவு இருந்தது தெரியவந்தது. இதன் காரணமாக சம்பத்குமாரை சந்தேகத்தின் அடிப்படையில் காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்தபோது திடுக்கிடும் உண்மைகள் தெரியவந்தது.
விசாரணையில், கடந்த புதன்கிழமை இரவு சென்னையில் இருந்து பேருந்து மூலம் வடலூருக்கு வந்து கொண்டிருந்த மஞ்சுளாவை செல்போனில் தொடர்பு கொண்ட சம்பத்குமார் நான் சொல்லும் இடத்தில் இறங்குமாறு தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் கூட்ரோடு பகுதியில் இறங்கிய மஞ்சுளாவை, சம்பத் தனது இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றுள்ளார். அங்கே இருவரும் தனிமையில் பேசி கொண்டிருந்தபோது மஞ்சுளா தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு சம்பத்தை வற்புறுத்தி சம்பத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் அதிகரித்த நிலையில், வடலூர் அடுத்த கண்ணு தோப்பு பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் வைத்து மஞ்சுளாவை சம்பத்குமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கழுத்தில் குத்தி கிழித்துள்ளார். மேலும் முகம் தெரியாத அளவுக்கு சிதைத்து நெடுஞ்சாலையில் அருகே மலைபோல் குவித்து வைக்கப்பட்டிருந்த மணலில் அவசர அவசரமாக புதைத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
அதையடுத்து இது கொலை தொடர்பாக தனிப்படை போலீசார் குற்றவாளி சம்பத்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தகாத உறவில் தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியதால் இளம்பெண் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த போது இது ஒரு திட்டமிட்ட கொலை அல்ல இருவருக்கும் இடையே நடந்த வாக்குவாதத்தில் ஏற்பட்ட சம்பவம் என தெரிய வருவதாகவும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்