fake-passports 
க்ரைம்

போலி பாஸ்போர்ட் வழக்கு: 5 காவல்துறையினர் உட்பட 50 -பேர் சிக்கினர்!!

இந்த விவகாரத்தில் ஐ.பி.எஸ் அதிகாரி டேவிட்சனுக்கு தொடர்பில்லை எனக் கூறி,

மாலை முரசு செய்தி குழு

போலி பாஸ்போர்ட் வழக்கில், ஐந்து காவல் துறையினர் உள்பட 50 க்கும் மேற்பட்டோருக்கு எதிராக  இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக, தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

மதுரை மாநகர காவல் ஆணையராக டேவிட்சன் தேவாசிர்வாதம் பதவி வகித்த காலத்தில் 200 -க்கும் மேற்பட்டோருக்கு போலி ஆவணங்களின் அடிப்படையில் பாஸ்போர்ட் வழங்கப்பட்டதாகவும், அதனால் ஐ.பி.எஸ். அதிகாரி டேவிட்சன் மீதான புகார் குறித்து ஆரம்பகட்ட விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என, சென்னையைச் சேர்ந்த வாராகி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த விவகாரத்தில் ஐ.பி.எஸ் அதிகாரி டேவிட்சனுக்கு தொடர்பில்லை எனக் கூறி, நற்சான்று அளித்து உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் உத்தரவின் அடிப்படையில், ஐந்து காவல் துறையினர் உள்பட 50 க்கும் மேற்பட்டோருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து, விசாரித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை, இரு நீதிபதிகள் அமர்வும் உறுதி செய்துள்ள நிலையில், இந்த மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள், விசாரணை நீதிமன்றத்தில் இறுதி அறிக்கையில் ஐ.பி.எஸ். அதிகாரி டேவிட்சனை சேர்க்க கோரி மனுத்தாக்கல் செய்யலாம் என மனுதாரருக்கு அறிவுறுத்தி, விசாரணையை அக்டோபர் 7 ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.