க்ரைம்

“யூடியூப் பார்த்து பிரசவம் மேற்கொண்ட குடும்பத்தினர்” - அதிக ரத்தப் போக்கினால் உயிரிழந்த பெண்.. கணவர் மீது போடப்பட்ட வழக்கு!

இரண்டாவது முறையாக கருவுற்றிருந்த சசிகலா, மருத்துவமனையில் பிரசவம் மேற்கொள்ளாமல்

Muthu Lakshmi

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே வீட்டிலேயே இயற்கை முறையில் பிரசவம் மேற்கொண்ட இளம்பெண், அதிக ரத்தப்போக்கு காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக உயிரிழந்த பெண்ணின் கணவர் மீது போலீசார் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே தளவாய் பாளையத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவரின் மனைவி சசிகலா. இந்த தம்பதிக்கு ஏற்கனவே நான்கு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இதையடுத்து இரண்டாவது முறையாக கருவுற்றிருந்த சசிகலா, மருத்துவமனையில் பிரசவம் மேற்கொள்ளாமல், வீட்டிலேயே இயற்கை முறையில் பிரசவம் பார்க்க முடிவு செய்ததாக கூறப்படுகிறது. கடந்த 24-ஆம் தேதி வீட்டிலேயே நடைபெற்ற பிரசவத்தில் சசிகலாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. ஆனால் பிரசவத்திற்குப் பிறகு அவருக்கு அதிகளவில் ரத்தப்போக்கு ஏற்பட்டதால் உடல்நிலை மோசமடைந்தது. இதையடுத்து குடும்பத்தினர் அவரை அவசரமாக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்ததால் மேல்சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி சசிகலா உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக திருப்பூர் மாவட்ட சுகாதாரத் துறையினர் ஏற்கனவே விசாரணையை தொடங்கியிருந்தனர். வீட்டிலேயே பிரசவம் நடத்தப்பட்ட சூழல், மருத்துவ ஆலோசனை பெறப்பட்டதா, கர்ப்ப கால பரிசோதனைகள் முறையாக மேற்கொள்ளப்பட்டதா உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், திருப்பூர் மாவட்ட மருந்தக ஆய்வாளர் அளித்த புகாரின் பேரில் ஊத்துக்குளி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். உயிரிழந்த சசிகலாவின் கணவர் கார்த்திக் மீது, கொலையாகாத மரணம் மற்றும் கருவுற்றதை மறைத்து தனிப்பட்ட முறையில் பிரசவம் மேற்கொண்டது உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், வீட்டிலேயே இயற்கை முறையில் பிரசவம் மேற்கொள்ளப்பட்டதற்கான காரணம், அதற்கு யார் ஆலோசனை வழங்கினர்? பிரசவத்தின்போது மருத்துவ உதவி ஏதேனும் பெறப்பட்டதா? தாமதமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதா? என்பது உள்ளிட்ட பல்வேறு சந்தேகங்களை வைத்து ஊத்துக்குளி போலீசாரும், சுகாதாரத் துறையினரும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.