திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் அடுத்த மாங்கால் கூட்ரோடு பகுதியை சேர்ந்தவர் 48 வயதான கன்னியப்பன். இவருக்கு சொந்தமான 8 ஏக்கர் விவசாயம் நிலம் வைத்து விவசாயம் செய்து வருகிறார். கன்னியப்பனின் வீட்டிற்கு வருமானத்திற்கான ஓரே ஆதாரம் இந்த விவசாய நிலம் மட்டும் தான் என சொல்லப்படுகிறது. இந்த நிலையில் இவரது நிலத்தின் அருகே சிப்காட் கம்பெனிக்கு வழி ஏற்படுத்துவதற்கு கன்னியப்பனிடம் சிப்காட் அதிகாரிகள் இடம் கேட்டுள்ளனர் கன்னியப்பன் தனது நிலத்தை தர மறுத்த நிலையில் அந்த நிலத்தை கேட்டு சிப்காட் அதிகாரிகள் தொடர்ந்து கன்னியப்பனை தொந்தரவு செய்து வந்துள்ளனர்.
தனது நிலத்தை சிப்காட் வழி அமைக்க கொடுக்காமல் அந்த அதிகாரிகளிடம் கன்னியப்பன் பல வருடங்களாக போராடி வந்த நிலையில் நேற்று கன்னியப்பன் மாங்கால் கூட்டுச்சாலை அருகே உள்ள மளிகை கடைக்கு சென்று வருவதாக தனது வீட்டில் கூறிவிட்டு சென்றுள்ளார்.கடைக்கு சென்று வெகு நேரமாகியும் கன்னியப்பன் வீட்டிற்கு வராததால் கன்னியப்பனின் மகன்கள் தங்களது விவசாய நிலத்திற்கு சென்று பார்த்த போது மூன்று இருசக்கர வாகனங்கள் இருந்ததாகவும் மேலும் கன்னியப்பன் தனது மகன்களிடம் “நீங்க போங்க நான் வர” என்று கூறியுள்ளார் எனவே கன்னியப்பனின் மகன்கள் வீட்டிற்குச் சென்று விட்டனர்.
பின்னர் வெகு நேரமாகியும் கன்னியப்பன் வீட்டிற்கு வராததால் கன்னியப்பனின் உறவினர்கள் விவசாய நிலத்திற்கு சென்று பார்த்த போது கன்னியப்பன் தலையில் பலத்த ரத்த காயங்களுடன் கால்வாயில் பிணமாக இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்து தூசி காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கன்னியப்பனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
சிப்காட் கம்பெனிக்கு வழி தருவதற்கு மறுத்த கன்னியப்பனை சிப்காட் வேலை செய்யும் ஒப்பந்ததாரர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கன்னியப்பனை கொலை செய்து கால்வாயில் வீசி உள்ளார்கள் என்று உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும் கன்னியப்பனை கொலை செய்த நபர்கள் வழக்கு பதிவு செய்து உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி வந்தவாசி காஞ்சிபுரம் சாலை மாங்கால் கூட்ரோடு அருகே உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் வந்தவாசி - காஞ்சிபுரம் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விவசாய நிலத்தில் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.