க்ரைம்

“காதலித்த மகளை கத்தியால் குத்தி கொன்ற தந்தை” - பிளான் போட்டு செயல் படுத்திய அண்ணன்… அக்கா வீட்டில் தங்கைக்கு நடந்த கொடூரம்!

பின்னர் ரமேஷ், பாலமுருகன் ஆகியோர், பிரியங்காவை தனி அறையில் வைத்து பூட்டி...

Mahalakshmi Somasundaram

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பந்தல்குடி அருகே உள்ள சிந்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கு திருமணமாகி பாலமுருகன் என்ற மகனும், ஐஸ்வர்யா மற்றும் பிரியங்கா என்ற இரண்டு மகள்களும் உள்ளனர். இதில் 24 வயதுடைய பிரியங்கா, நர்சிங் படித்து முடித்து விட்டு நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேலை செய்து வந்தார். இந்நிலையில், அவருக்கு திருமண ஏற்பாடு செய்யப்பட்டு மதுரையை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தத்தம் நடைபெற்றது.

அப்போது பிரியங்கா “தனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என்றும், வேறு ஒருவரை காதலிப்பதாகவும்” கூறிய நிலையில் அவரின் காதலுக்கு பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கடந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறிய பிரியங்கா அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதுகுறித்து விசாரணை நடத்திய போலீஸார், வீட்டிற்கு செல்ல விருப்பம் இல்லை என கூறிய பிரியங்காவை விருதுநகரில் உள்ள காப்பகத்தில் தங்க வைத்தனர்.

இதனால் ஆத்திரமடைந்து காப்பகத்திற்கு சென்ற பிரியங்காவின் தந்தை ரமேஷ், அண்ணன் பாலமுருகன் ஆகியோர் அவரிடம் சமாதானம் பேசி வீட்டிற்கு அமைத்திருக்கின்றனர். பின்னர் அவர்கள் 3 பேரும் காரில் புறப்பட்டு மதுரை வில்லாபுரம் அடுத்துள்ள ஜவகர் புறத்தில் உள்ள ரமேஷின் மூத்த மகள் ஐஸ்வர்யா வீட்டிற்கு சென்றிருக்கின்றனர். பின்னர் ரமேஷ், பாலமுருகன் ஆகியோர், பிரியங்காவை தனி அறையில் வைத்து பூட்டி, “நாங்கள் பார்த்த மாப்பிள்ளையை திருமணம் செய்ய முடியாதா, குடும்பத்தை அசிங்கப்படுத்திய நீ உயிருடன் இருக்கக் கூடாது” என கூறி மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு தப்பி சென்றனர்.

பிரியங்காவின் அலறல் சத்தம் கேட்டு வந்த உறவினர்கள் பலத்த காயம் அடைந்த பிரியங்காவை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரியங்கா உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து உறவினர்கள் அளித்த புகாரின் பேரில், அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரியங்காவின் தந்தை ரமேஷ் மற்றும் அவரது அண்ணன் பாலமுருகன் இருவரையும் கைது செய்தனர். திருமணத்திற்கு மறுத்த மகளை தந்தை மற்றும் சகோதரர் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்