க்ரைம்

தந்தையே மகளை கொன்ற கொடூரம்...8 வயது சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் வெளியான திடுக்கிடும் உண்மை!

Tamil Selvi Selvakumar

ஜம்முகாஷ்மீரில் 8 வயது சிறுமி உயிரிழந்த விவகாரத்தில், தந்தையே மகளை கொன்ற  உண்மை தற்போது தெரியவந்துள்ளது.


குர்ஹாமா கிராமத்தில் வசித்து வந்த இக்பால் என்பவர், தனது மனைவியுடனான சண்டையில் தற்கொலை செய்வதற்காக இருசக்கர வாகனத்தில் செல்ல முயன்றுள்ளார். அப்போது வலுக்கட்டாயமாக வாகனத்தில் ஏறிய அவரது மகள், வீடு திரும்புமாறு தந்தையிடம் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. 

மகள் பணம் கொடுத்தால் வீட்டிற்கு சென்றுவிடுவாள் என்று எண்ணிய இக்பால், பணம் கொடுத்தும் மகள் திரும்பிச் செல்லாததால் ஆத்திரத்தில் மகளின் கழுத்தை நெறித்துள்ளார். அதில் சிறுமி உயிரிழக்கவே, மகள் என்றும் பாராமல் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு உடலை அருகிலேயே வீசி சென்றுள்ளார் இக்பால்.

இதையடுத்து மகளைக் காணவில்லை என புகாரளித்துள்ளார். புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசாருக்கு, தற்கொலையை தடுத்த ஆத்திரத்தில் தந்தையே மகளைக் கொன்று விட்டு, மகளை காணவில்லை என்று நாடகமாடிய உண்மை தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து, மகளைக் காணவில்லை என புகாரளித்து நாடகமாடிய இக்பாலை, போலீசார் கைது செய்தனர்.