தன்னை வலுக்கட்டாயமாக முத்தமிட்டதுடன், தவறான எண்ணத்துடன் தொட்டுச் சில்மிஷம் செய்ய முயன்ற ஒரு நபரின் நாக்கை, அந்தப் பெண் கடித்துத் துண்டாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்த 'சாம்பி' என்ற பெயரில் அடையாளம் காணப்பட்ட அந்த நபருக்குத் திருமணம் ஆகிவிட்ட நிலையில், அவர் அந்தப் பெண்ணுடன் ரகசியத் தொடர்பில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
35 வயதான சாம்பி, அந்தப் பெண்ணுக்குப் பெற்றோர்கள் பார்த்து நிச்சயம் செய்த திருமணம் விரைவில் நடக்கவிருந்ததால், மிகவும் மன வருத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. திருமணத்திற்குத் தயாராகிக் கொண்டிருந்த அந்தப் பெண், சாம்பியிடம் இருந்து விலகியே இருக்க முயன்றார். இதுவே சாம்பிக்கு மிகுந்த வேதனையை அளித்ததாகவும், அதனால் அவர் அடிக்கடி அவளைச் சந்திக்க வழி தேடியதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த திங்கட்கிழமை மதியம், அந்தப் பெண் தனியாகக் குளத்தின் அருகே சென்றிருந்தார். அந்தச் சமயம் பார்த்து சாம்பி அவரைப் பின்தொடர்ந்து குளக்கரைக்குப் போனார். அங்கு, அவர் அந்தப் பெண்ணை வலுக்கட்டாயமாகப் பிடித்து இழுத்து, தவறான நோக்கத்தில் தொட்டு அத்துமீறினார்.
இதற்கு அந்தப் பெண் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து அவரைத் தள்ளிவிட முயன்றார். ஆனாலும், சாம்பி அவரை விடாமல் அச்சுறுத்தியதுடன், வலுக்கட்டாயமாக முத்தமிடவும் ஆரம்பித்தார். அந்த ஆத்திரத்தில், வேறு வழியின்றி அந்தப் பெண் சாம்பியின் நாக்கைக் கெட்டியாகக் கடித்ததில், நாக்கின் ஒரு பகுதி துண்டாகி விட்டதாகக் கூறப்படுகிறது.
நாக்கு துண்டான வலியால் சாம்பி சத்தம் போட்டார். அவரிடமிருந்து கடுமையான ரத்தம் கொட்டியது. அவரது அலறல் சத்தம் கேட்டு கிராம மக்கள் ஓடி வந்து சாம்பியின் குடும்பத்தினருக்குத் தகவல் கொடுத்தனர். அதன் பின்னர், அவர்கள் உடனடியாக சாம்பியை அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்குச் சிகிச்சை அளித்த மருத்துவர்கள், காயம் தீவிரமாக இருந்ததால், மேல் சிகிச்சைக்காகக் கான்பூரில் உள்ள பெரிய மருத்துவமனைக்கு அவரை அனுப்பி வைத்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து உறுதிப்படுத்திய துணை போலீஸ் கமிஷனர் தினேஷ் திரிபாதி, அந்த ஆணிடம் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.