க்ரைம்

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி...மலேசியா பெண்ணிடம் 40 லட்சம் பணம் மோசடி செய்த காதலன்!

Tamil Selvi Selvakumar

மலேசிய பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக கூறி 40 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்த காதலன் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் பரம்பூரைச் சேர்ந்த பொன் மணிகண்டன் என்பவர், மலேசியாவில் பணியாற்றி வந்துள்ளார். அப்போது, மலேசியா சிட்டிசனான மகேஸ்வரி என்ற பெண்ணிடம் நெருங்கி பழகி திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அவரிடம் 40 லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுள்ளார்.

ஆனால், கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா பரவல் நேரத்தில் இந்தியா வந்தவர் மீண்டும் மலேசியா செல்லாமல் பரம்பூரிலேயே இருந்துள்ளார்.  மகேஸ்வரி போன் மூலம் தொடர்பு கொண்ட போதும், பிஸியாக இருப்பதாக கூறி அலைக்கழித்து வந்துள்ளார். 

இதையடுத்து தனது காதலன் மீது சந்தேகமடைந்த மகேஸ்வரி, இந்தியா வந்து பொன் மணிகண்டனிடம் திருமணம் குறித்து கேட்டபோது, அவரும் குடும்பத்தாரும் சேர்ந்து மகேஸ்வரியை மிரட்டியுள்ளனர். அதுமட்டுமல்லாமல், மணிகண்டனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதையும் கண்டுபிடித்துள்ளார்.

அதன்பிறகு, தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த மகேஸ்வரி அன்னவாசல் காவல் நிலையத்தில், தன்னை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைக்கூறி ஏமாற்றிய காதலன் மீது புகாரி அளித்தார். புகாரின்பேரில், மணிகண்டன் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.