க்ரைம்

“புதரில் வைத்து சீரழிக்கப்பட்ட பெண் காவலர்” - ஆண் நண்பருடன் சென்றவருக்கு நடந்த கொடுமை.. சிவகங்கை உலுக்கிய கூட்டு பாலியல் வன்கொடுமை!

இதனால் அதிர்ச்சியடைந்த பெண் காவலர் அவர்களிடம் இருந்து தப்பித்து அருகில் இருந்த வீடுகளுக்கு சென்று உதவி கோரியுள்ளார்..

Mahalakshmi Somasundaram

சிவகங்கை மாவட்ட ஆயுதப்படை பிரிவில் பணியாற்றி வரும் திருமணமான பெண் காவலர் ஒருவருக்கு, மானாமதுரை அருகே உள்ள தூதை கிராமத்தைச் சேர்ந்த 28 வயதுடைய ராபின் என்ற லாரி ஓட்டுநருடன் பழக்கம் ஏற்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இருவரும் நண்பர்களாக பழகி வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ராபின் அந்த பெண் காவலரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு அவசரமாக சந்திக்க வேண்டும் என கூறியுள்ளார். இதனை தொடர்ந்து நண்பன் தானே என நம்பி பெண் காவலர், சிவகங்கை - திருப்பத்தூர் சாலையில் உள்ள ஒரு பகுதியில் ராபினை சந்திக்க சென்றுள்ளார்.

அப்போது ராபின் பெண் காவலரை ஆள் நடமாட்டம் குறைவாக உள்ள புதர் பகுதிக்கு அழைத்துச் சென்று அவரிடம் தகாத முறையில் நடந்து கொள்ள முயற்சித்திருக்கிறார். எனவே பெண் காவலர் அவரிடம் இருந்து தப்பிக்க முயற்சித்த போது அங்கு வந்த ராபினின் நண்பர்களான சித்தாலங்குடி கிராமத்தைச் சேர்ந்த 29 வயதுடைய மகாராஜா மற்றும் 21 வயதுடைய ஹரிஸ் ஆகியோரும் அங்கு வந்துள்ளனர். பின்னர் அவர்கள் மூவரும் சேர்ந்து பெண் காவலரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த பெண் காவலர் அவர்களிடம் இருந்து தப்பித்து அருகில் இருந்த வீடுகளுக்கு சென்று உதவி கோரியுள்ளார்.

இதையடுத்து அப்பகுதி மக்கள் உதவியுடன் போலீஸ் அவசர உதவி எண் 100 க்கு போன் செய்து தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் பெண் காவலரை பாதுகாப்பாக மீட்டதுடன், சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விவகாரம் தொடர்பாக சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவப்பிரசாத் உத்தரவின் பேரில், துணை காவல் கண்காணிப்பாளர் அமல அட்வின் மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மாரீஸ்வரி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், பெண் காவலர் அளித்த புகாரின் அடிப்படையில் ராபின், மகாராஜா மற்றும் கல்லூரி மாணவரான ஹரிஸ் ஆகிய மூவரையும் காவல்துறையினர் பிடித்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் மூவரின் மீதும் பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் பெண் காவலரே இவ்வாறு பாதிக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் சிவகங்கை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.