உத்தரபிரதேச மாநிலம், காஜிப்பூர் மாவட்டம் துல்லஹ்பூர் காவல் எல்லைக்குட்பட்ட கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். அவருடைய தாயின் சகோதரியான சித்தி புஷ்பா தேவி மற்றும் அதே கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், கடந்த சில நாட்களாக அந்த இளம்பெண்ணை குறிவைத்து நெருங்கிப் பழகி, 80 லட்சம் சம்பளம் கிடைக்கும் வேலை இருப்பதாக தொடர்ந்து ஆசை வார்த்தைகளை கூறி வந்ததாக கூறப்படுகிறது. “ஒரு குறிப்பிட்ட வேலை செய்தால் அதற்கு மொத்தம் ரூ.80 லட்சம் வழங்கப்படும் என்றும், அதில் ரூ.20 லட்சம் உனக்கு நேரடியாக கிடைக்கும் என்றும், மீதமுள்ள தொகையை நானும், அந்த வாலிபரும் உனக்கு வேலை வாங்கி கொடுத்ததற்காக எடுத்துக் கொள்வோம்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த விவகாரம் குறித்து வீட்டில் யாரிடமும் கூறக்கூடாது என்றும் மிரட்டியதாக சொல்லப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த இளம்பெண், அந்த வேலை என்ன என்பது குறித்து சித்தியிடம் மீண்டும் மீண்டும் கேட்டுள்ளார். அதற்கு, "உன்னை அழைத்துச் செல்ல ஒரு கார் வரும். அதில் ஏறி பக்கத்து மாவட்டமான அசம்காருக்கு செல்ல வேண்டும். அங்கு ஒரு மணி நேரம் மட்டும் இருந்துவிட்டு திரும்பி வந்தால் போதும்" என்று தெரிவித்துள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த இளம் பெண் ஒரு மணி நேரத்திற்கு ரூ.20 லட்சம் கிடைக்கும் அளவுக்கு என்ன வேலை என்று தொடர்ந்து தொல்லை செய்து கேட்டபோது, அங்கு ஆபாசமான செயல்களில் ஈடுபட வேண்டும் என்ற திட்டத்தை அவரது சித்தி வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதைக் கேட்டு ஆத்திரமடைந்த இளம்பெண், உடனடியாக அந்த திட்டத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். எனவே புஷ்பா தேவியுடன் இருந்த அந்த வாலிபர் இளம்பெண்ணை கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளார். எனவே அச்சமடைந்த நடந்த சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்து பின்னர், பெற்றோர் உதவியுடன் துல்லஹ்பூர் காவல் நிலையத்தில் சென்று புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையின் போது, பணத்திற்காக இளம்பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த திட்டமிட்டதாகக் கூறப்படும் சித்தி புஷ்பா தேவி மற்றும் அவரது கூட்டாளியான இளைஞர் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்ய தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். பணத்தாசைக்காக சித்தி, சொந்த அக்கா மகளையே பாலியல் தொழிலில் தள்ள முயன்றதாகக் கூறப்படும் இந்தச் சம்பவம் உத்தரப் பிரதேச மாநிலம் காஜிப்பூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.