வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில், திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்ததாக கூறப்படும் பிரச்சனையில், தனியார் நிறுவன ஊழியர் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக நான்கு பெண்களைப் பிடித்து போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடியாத்தம், கொண்டசமுத்திரம் அம்பேத்கர் நகரில் வசித்து வந்தவர் கதிரவன் (40). வேலூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராகப் பணியாற்றி வந்த இவர், வழக்கறிஞராகவும் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. திருமணமாகாத கதிரவனுக்கும், செண்டத்தூர் கிராமம், அருணாச்சல் நகரைச் சேர்ந்த நட்சத்திரா (35) என்பவருக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்ததாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே நட்சத்திராவுக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணமாகி ஒரு மகன் உள்ள நிலையில், தற்போது அவர் கணவரைப் பிரிந்து தனியாக வசித்து வருகிறார்.
இதற்கிடையே, கடந்த சில நாட்களாக நட்சத்திராவிடம் பேசுவதையும் பழகுவதையும் கதிரவன் தவிர்த்து வந்த நிலையில் வேறொரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், அவர் பலமுறை கதிரவனை தொடர்பு கொள்ள முயன்றுள்ளார். ஆனாலும், கதிரவனிடமிருந்து எந்தவித பதிலும் வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த நட்சத்திரா நேற்று முன்தினம் (அக் 14) இரவு, தனது அக்கா அமுதா (55), அவரது மகள்களான பிரபாவதி (34), லட்சுமி (32) ஆகியோருடன் கதிரவனின் வீட்டிற்குச் சென்றுள்ளார்.
அங்கு கதிரவனுக்கும் அந்த நான்கு பெண்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. வாக்குவாதம் முற்றிய நிலையில், அவர்களுக்குள் நடந்த சண்டை கைகலப்பாக மாறியுள்ளது. அப்போது நிலைதடுமாறிக் கீழே விழுந்த கதிரவன் பலத்த காயமடைந்து மயக்கமடைந்துள்ளார்.
இதையடுத்து, அங்கிருந்தவர்கள் கதிரவனை மீட்டு குடியாத்தம் அரசு தலைமை மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு சென்றுள்ளனர். ஆனால், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், கதிரவன் மருத்துவமனைக்குக் கொண்டு வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, கதிரவனின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக குடியாத்தம் நகர போலீசார் வழக்குப் பதிவு செய்து, நட்சத்திரா, அமுதா, பிரபாவதி, லட்சுமி ஆகிய நான்கு பெண்களையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடியாத்தத்தில் திருமணத்தை மீறிய உறவில் ஏற்பட்ட தகராறில் தனியார் நிறுவன ஊழியர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.