gujarat student murder  
க்ரைம்

குஜராத் மாணவர் கொலை: இன்ஸ்டாகிராம் சாட் மூலம் வெளியான பகீர் வாக்குமூலம்!!

8-ம் வகுப்பு மாணவர் தனது பாக்கெட்டில் வைத்திருந்த கத்தியை எடுத்து நயனின் வயிற்றில்...

மாலை முரசு செய்தி குழு

அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பள்ளி மாணவர் ஒருவர், தனது ஜூனியர் மாணவரால் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலைக்குப் பின்னால் இருந்த பயங்கரமான உண்மைகள், இன்ஸ்டாகிராம் சாட் மூலம் வெளியாகியுள்ளன.

பகீர் சம்பவம் என்ன?

அகமதாபாத்தில் உள்ள 'செவன்த்-டே அட்வென்டிஸ்ட் ஹையர் செகண்டரி பள்ளி'யில் 10-ம் வகுப்பு படித்துவந்த நயன் என்ற மாணவர், கடந்த செவ்வாய்க்கிழமை பள்ளி முடிந்தவுடன் வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தார். அப்போது, அதே பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவரும் அவரது நண்பர்களும் சேர்ந்து நயனை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், 8-ம் வகுப்பு மாணவர் தனது பாக்கெட்டில் வைத்திருந்த கத்தியை எடுத்து நயனின் வயிற்றில் குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். கத்தியால் குத்தப்பட்ட நயன், ரத்தக் காயங்களுடன் பள்ளிக்குள் ஓடி வந்து உதவி கோரியுள்ளார். உடனடியாக அவர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி மறுநாள் உயிரிழந்தார்.

வைரலான இன்ஸ்டாகிராம் சாட்

மாணவர் நயனின் கொலையைத் தொடர்ந்து, காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது, குற்றவாளி மாணவர் தனது நண்பருடன் இன்ஸ்டாகிராமில் உரையாடிய சாட், காவல்துறையினருக்குக் கிடைத்தது.

அந்த உரையாடல் இதோ:

நண்பர்: "மச்சான், இன்னைக்கு ஏதாவது செய்தியா?"

குற்றவாளி: "ஆமா."

நண்பர்: "மச்சான், நீதானே கத்தியால் குத்தினாய்?"

குற்றவாளி: "உனக்கு யார் சொன்னது?"

நண்பர்: "ஒரு நிமிஷம் கால் பண்ணு. போன்ல பேசிக்கலாம்."

குற்றவாளி: "வேண்டாம், வேண்டாம்..."

நண்பர்: "இதெல்லாம் சாட்டில் பேசக்கூடாது. என் மனசுல உன் பெயர்தான் முதலில் வந்தது, அதான் உனக்கு மெசேஜ் செய்தேன்."

குற்றவாளி: "இப்போது அண்ணன் என் கூட இருக்கார். அவருக்கு ஒண்ணும் தெரியாது. யார் சொன்னது உனக்கு!"

நண்பர்: "அவன் செத்துட்டான் போல."

குற்றவாளி: "கொலை செய்யணும்னு நினைக்கல."

இந்த உரையாடலில், குற்றவாளி மாணவன் தான் செய்த குற்றத்தை நேரடியாக ஒப்புக்கொண்டது காவல்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

மாணவர் நயனின் மரணச் செய்தி வெளியானதும், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பெற்றோர்கள் மற்றும் மாணவர் அமைப்பினர் பள்ளி முன்பு திரண்டு கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பள்ளியின் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததுடன், ஊழியர்களையும் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

குற்றவாளியான சிறுவனை காவல்துறையினர் கைது செய்து, சிறுவர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சமூக ஊடகங்கள் மற்றும் வன்முறை நிறைந்த விளையாட்டுகளின் தாக்கம், இதுபோன்ற குற்றச் சம்பவங்கள் அதிகரிப்பதற்கான முக்கியக் காரணம் என கல்வியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.