க்ரைம்

“தனித்தனியாக கிடந்த தலை மற்றும் உடல்” - ஓரினச்சேர்க்கை தகராறில் விபரீதம்.. சிறுவர்கள் செய்த அதிர்ச்சி சம்பவம்!

போலீசார் அந்த இடத்தில் தோண்டி பார்த்தபோது, புதைக்கப்பட்டிருந்த மகேந்திரனின் தலையை மீட்டனர்...

Mahalakshmi Somasundaram

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே உள்ள வலசை கிராமத்தைச் சேர்ந்தவர் 30 வயதுடைய மகேந்திரன். இவர் கடந்த 6-ஆம் தேதி திடீரென வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது மனைவி மற்றும் பெற்றோர் உறவினர்கள் வீடு, நண்பர்கள் வீடு என பல இடங்களில் தேடியும் மகேந்திரன் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து, கடந்த 14-ஆம் தேதி மகேந்திரனின் பெற்றோர் சேர்ந்தமரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், மாயமான மகேந்திரனை பல்வேறு கோணங்களில் தேடி வந்தனர்.

விசாரணையின் ஒரு பகுதியாக மகேந்திரனின் செல்போன் அழைப்பு விவரங்களை ஆய்வு செய்த போலீசார், அவர் மாயமாகும் முன்பு இரண்டு சிறுவர்களுடன் கடைசியாக பேசியிருப்பதை கண்டறிந்தனர். இதையடுத்து, அந்த இரண்டு சிறுவர்களையும் பிடித்து விசாரணை நடத்தியபோது, அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்ததால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. தொடர்ந்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியபோது, மகேந்திரனை தாங்களும் மேலும் சிலரும் சேர்ந்து கொலை செய்ததாகவும், பின்னர் அவரது உடலில் கல்லைக் கட்டி கடையநல்லூர் பேருந்து நிலையம் அருகே உள்ள கிணற்றில் வீசியதாகவும் சிறுவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் கிணற்றிலிருந்து உடலை மீட்ட போது, அதில் தலை துண்டிக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர், "தலை எங்கே?" என்று விசாரித்தபோது, குற்றாலம் காவல் நிலையம் அருகே உள்ள கலைவாணர் அரங்கத்தின் பின்புறத்தில் புதைத்து வைத்திருப்பதாக சிறுவர்கள் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து, தென்காசி தாசில்தார் முன்னிலையில் போலீசார் அந்த இடத்தில் தோண்டி பார்த்தபோது, புதைக்கப்பட்டிருந்த மகேந்திரனின் தலையை மீட்டனர். பின்னர் உடலும், தலையும் உடற்கூறாய்வுக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக கடையநல்லூர் மற்றும் சேந்தமரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 சிறுவர்களை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், ஓரினச்சேர்க்கை தொடர்பான தகராறு காரணமாக 4 பேர் சேர்ந்து மகேந்திரனை கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 6 நாட்களாக மாயமான இளைஞர் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டதும், ஓரினச்சேர்க்கை தகராறு காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்ற முதற்கட்ட தகவலும் தென்காசி மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.