க்ரைம்

கலாஷேத்ரா.. பாலியல் தொல்லையை தடுக்க.. கொள்கை வகுக்க... உயர் நீதிமன்றம் உத்தரவு...!!

Malaimurasu Seithigal TV

கலாஷேத்ரா அறக்கட்டளை கல்வி நிறுவனங்களில் பாலியல் தொல்லை புகாரை தடுக்கும் வகையில் விரிவான கொள்கையை வகுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சென்னை கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரம் தொடர்பாக  விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள குழுவில் கலாஷேத்ரா அறக்கட்டளை இயக்குனர் ரேவதி ராமச்சந்திரன் இடம் பெறக் கூடாது எனவும், குழுவில் மாணவிகளின் பிரதிநிதிகள், பெற்றோரின் பிரதிநிதிகள் இடம்பெறும் வகையில் மாற்றியமைக்க வேண்டும் என்று கோரி கல்லூரி மாணவிகள் ஏழு பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

அந்த மனுவில், புகார் அளித்த மாணவிகளுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க கலாஷேத்ரா நிர்வாகத்திற்கு தடை விதிக்கவேண்டும் எனவும், பாலியல் தொல்லை அளித்தவர்கள் வளாகத்திற்குள் நுழைய தடை விதிக்கவும்,  கலாஷேத்ரா விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய தமிழ்நாடு மகளிர் ஆணையம், தனது அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் எனவும் கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் இன்று உயர் நீதிமன்ற நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. இதில் இடைக்கால உத்தரவு பிறப்பித்த நீதிபதி தண்டபாணி, கலாஷேத்ரா அறக்கட்டளை அமைத்துள்ள உள் விசாரணைக் குழுவில் இடம் பெற்றவர்களின் விவரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார்.

மேலும், விசாரணைக் குழுவை உயர் நீதிமன்றம் ஏன் நியமிக்கக் கூடாது என விளக்கமளிக்கும்படி கலாஷேத்ரா அறக்கட்டளைக்கு உத்தரவு பிறப்பித்தார். தொடந்து, போராடிய மாணவிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க  தடை விதித்தும், இதுத் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் மாநில மகளிர் ஆணைய அறிக்கையை  சீலிடப்பட்ட உறையில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டும் ஆணை பிறப்பித்திருந்தார்.
 
மேலும் கலாஷேத்ரா அறக்கட்டளை நடத்தும் கல்வி நிறுவனங்களில் பெண்களுக்கு பாலியல் தொல்லை தடுப்புச் சட்டம், போக்சோ சட்டம், பல்கலைக்கழக மானிய குழு சட்டம் உள்ளிட்ட சட்ட விதிகளின் அடிப்படையில் பாலியல் தொல்லைகளை தடுக்க விரிவான கொள்கை வகுக்கப்பட வேண்டும் எனவும் உத்தரவிட்டார். கொள்கை வகுத்த பின் பாலியல் தொல்லை புகார் குறித்து விசாரிக்க அமைக்கப்படும் உள் விசாரணை குழுவில், மாணவிகள் மற்றும் பெற்றோரின் பிரதிநிதிகளை சேர்க்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

நிலுவையில் உள்ள இந்த வழக்கு, காவல் துறையோ, நீதிபதி கண்ணன் குழுவோ விசாரணையை தொடர தடையாக இருக்காது என உத்தரவிட்டு, அடுத்த கட்ட விசாரணையை ஜூன் 15ம் தேதிக்கு தள்ளிவைத்தார். அதேபோல மாணவிகளுக்கு ஆதரவான ஆசிரியர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது எனவும் கலாஷேத்ரா நிர்வாகத்தை அறிவுறுத்தியுள்ளார்.