திருப்பத்தூர் மாவட்டம், சு.பள்ளிப்பட்டு அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் அரசு (43). இவர் கட்டிட தொழிலில் சென்ரிங் வேலை செய்து வருகிறார். தர்மபுரி பகுதியைச் சேர்ந்த ரத்தினா (38) என்பவருக்கும், இவருக்கும் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. அதாவது இருவருக்கு 14 வயது இருக்கும் போது இந்த திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு மூன்று பிள்ளைகளும் உள்ளனர்.
இந்நிலையில் அரசு அதே ஊரை சேர்ந்த அபிராமி என்ற பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்து வந்துள்ளார். மேலும் அவர் வேலைக்கு செல்லும் ஊருக்கெல்லாம் அபிராமியும் கூட்டிச் சென்றுள்ளார். இதை அவரது மனைவி ரத்னா கேட்டபோது, அவரை கடுமையாக தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் இவர்கள் புதிதாக கட்டி வந்த வீட்டைவிட்டு மனைவி மற்றும் மகள்களை வெளியேற சொல்லி கட்டாயப்படுத்தி வந்துள்ளார். அந்த வீட்டில் தனது கள்ளக்காதலி அபிராமியுடன் இணைந்து வாழ போவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அபிராமியை திருமணம் செய்து கொண்டு அவரது மனைவி ரத்னாவை ஆபாசமாகத் திட்டி கொலை மிரட்டல் விடுத்து கொடுமைப்படுத்தி வந்ததாகவும் சொல்லப்படுகிறது.
இதனால் மன உளைச்சலில் இருந்த ரத்னா இதுகுறித்து கந்திலி காவல் நிலையம் மற்றும் திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் புகாரில் கணவரிடமிருந்து தனது வீட்டை மீட்டு தரக்கோரி குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் புகார் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என சொல்லப்படுகிறது. இதனால் கடும் மன உளைச்சலில் இருந்த ரத்தினா, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு தனது இரு மகளுடன் வந்துள்ளார். அப்போது மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை ரத்தினா மற்றும் அவரது மகள் மீது ஊற்றி தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதிர்ச்சியடைந்த பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், உடனடியாக இருவரையும் தடுத்து நிறுத்தி பத்திரமாக மீட்டனர். அதைத்தொடர்ந்து ரத்தினா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் மனு அளித்தார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கணவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெண் தனது மகளுடன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் - 104
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்