கர்நாடக மாநிலம், உனுசனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தப்பா என்பவரது மகன் 30 வயதுடைய ராஜேஷ். இவருக்கும் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன் கனிக்கோட்டை அடுத்துள்ள மல்லிகைபாய் தொட்டி கிராமத்தை சேர்ந்த 24 வயதுடைய சுஷ்மிதா என்பருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது. திருமணத்திற்கு பிறகு கர்நாடகாவில் குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில் சுஷ்மிதாவிற்கு வேறு ஒரு ஆணுடன் பழக்கம் ஏற்பட்டு திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்ததாகவும், இதனை அறிந்த ராஜேஷ் மனைவியின் கள்ள தொடர்பை கண்டித்திருக்கிறார்.
பலமுறை கூறியும் சுஷ்மிதா தனது திருமணத்திற்கு மீறிய உறவை கைவிடாததால் கணவன் மற்றும் மனைவி இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சுஷ்மிதா கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இரண்டு வயது குழந்தையை அழைத்து கொண்டு கணவனை பிரிந்து அவரது தாய் வீட்டிற்கு சென்றிருக்கிறார். இந்த நிலையில் இன்று ராஜேஷ் தனது தந்தை கோவிந்தப்பா, தாய் கெம்பம்மா மற்றும் ஊர் பெரியவர்கள் 30 பேருடன் மல்லிகை பாய் தொட்டி கிராமத்திற்கு சென்று மனைவியை அழைத்துச் செல்ல குடும்பத்தாரிடம் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர்.
அப்போது மீண்டும் கணவன் மனைவி இடையே திருமணத்திற்கு மீறிய உறவு குறித்து தகராறு ஏற்பட்ட நிலையில் ஆத்திரமடைந்த ராஜேஷ் மறைத்து வைத்திருந்த கத்தியால் மனைவியை கழுத்து உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக குத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றிருக்கிறார். இதனால் படுகாயமடைந்த ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த சுஷ்மிதாவை அங்கிருந்த உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக அஞ்செட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். அப்போது சுஷ்மிதாவை பரிசோதித்த அங்கிருந்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த தளி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து தளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் தப்பி ஓடிய ராஜேஷ் கர்நாடக மாநிலம் கோடள்ளி காவல் நிலையத்தில் போலீசாரிடம் சரணடைந்துள்ளார். கணவன் மனைவி பிரச்சினையை பேசி தீர்க்க சென்ற இடத்தில் கணவன் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.