மனித உறவுகளின் ஆழத்தைக் கேள்விக்குள்ளாக்கும் வகையில், ஹைதராபாத்தில் ஒரு கோரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. ஒரு இளம் கணவன், தனது ஐந்து மாத கர்ப்பிணி மனைவியைக் கொலை செய்து, அவரது உடலைத் துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசியுள்ளார். இந்தச் சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
விகாராபாத் மாவட்டத்தைச் சேர்ந்த மகேந்திர ரெட்டி (27) மற்றும் சுவாதி (21) ஆகியோர் காதலித்து ஜனவரி 2024-ல் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் ஆன சில மாதங்கள் மகிழ்ச்சியாக இருந்த தம்பதியர், பின்னர் குடும்பத் தகராறுகள் காரணமாக அடிக்கடி சண்டையிட்டுள்ளனர். சுவாதி, தனது கணவர் மகேந்திர ரெட்டி மீது குடும்ப வன்முறை குறித்த புகார் ஒன்றையும் அளித்திருந்தார். கிராமப் பெரியவர்களின் தலையீட்டுக்குப் பிறகு, அந்தப் பிரச்சனை தீர்க்கப்பட்டது.
திருமணம் ஆகி ஒரு வருடம் கூட ஆகாத நிலையில், சுவாதி ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். கர்ப்ப காலத்திலும், அவர்களுக்குள் சண்டைகள் தொடர்ந்துள்ளன. சுவாதி ஒரு கால்சென்டரில் பணிபுரிந்தபோது, கணவர் மகேந்திர ரெட்டி சந்தேகப்பட்டு, அவரை வேலையை விட்டு நிற்குமாறு வற்புறுத்தியுள்ளார். இதனால் அவர்களின் சண்டைகள் மேலும் அதிகரித்துள்ளன.
சம்பவம் நடந்த சனிக்கிழமை (ஆகஸ்ட் 23) அன்று, சுவாதி தனது பெற்றோருடன் விகாராபாத்தில் உள்ள தனது வீட்டிற்குச் சென்று, மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ள விரும்புவதாகக் கூறியுள்ளார். ஆனால், மகேந்திர ரெட்டி அதற்கு மறுத்துள்ளார். இது இருவருக்கும் இடையே ஒரு பெரிய வாக்குவாதத்திற்கு வழிவகுத்தது. இந்தச் சண்டையின் உச்சக்கட்டத்தில், ஆத்திரமடைந்த மகேந்திர ரெட்டி, தனது மனைவியைக் கொலை செய்ய முடிவெடுத்துள்ளார்.
சுவாதியுடன் சண்டையிட்ட பிறகு, அன்று மாலை 4.30 மணியளவில் மகேந்திர ரெட்டி அவளது கழுத்தை நெரித்துக் கொன்றதாகக் கூறப்படுகிறது. பின்னர், கொலையை மறைப்பதற்காக, ஒரு ரம்பம் போன்ற கூர்மையான கருவியைப் பயன்படுத்தி, தனது மனைவியின் உடலைத் துண்டு துண்டாக வெட்டி, ஒரு பேக்-பேக் மற்றும் பைகளில் எடுத்துச் சென்றுள்ளார். இரவின் இருட்டைப் பயன்படுத்தி, முசி ஆற்றில் (Musi river) மூன்று முறை சென்று, சுவாதியின் தலை, கைகள் மற்றும் கால்களை ஆற்றில் வீசியுள்ளார். உடலின் நடுப்பகுதியை மட்டும் தனது வீட்டில் வைத்துள்ளார்.
கொலைக்குப் பிறகு, மகேந்திர ரெட்டி தனது சகோதரியை அழைத்து, சுவாதி காணாமல் போய்விட்டதாகக் கூறியுள்ளார். அவரது சகோதரிக்கு சந்தேகம் ஏற்படவே, ஒரு உறவினரின் உதவியுடன் மகேந்திர ரெட்டியைப் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கும், அவர் தன் மனைவி காணாமல் போனதாக நாடகம் ஆடியுள்ளார். ஆனால், போலீசார் அவரிடம் நடத்திய தொடர் விசாரணையில், அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
போலீசார், மகேந்திர ரெட்டியைக் கைது செய்து, கொலை நடந்த வீட்டிலிருந்து சுவாதியின் உடல் பாகங்களைக் கைப்பற்றியுள்ளனர். மேலும், ஆற்றில் வீசப்பட்ட மற்ற உடல் பாகங்களை மீட்பதற்காக, தேசியப் பேரிடர் மீட்புப் படையினர் (NDRF) மற்றும் உள்ளூர் நீச்சல் வீரர்களைப் பயன்படுத்தி தீவிர தேடுதல் வேட்டையை நடத்தி வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.