உத்தரப் பிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்திய ஒரு சம்பவம் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. திருமணமான பெண் ஒருவர், தனது காதலனுடன் வாழ வேண்டும் என்ற கோரிக்கையுடன் மொபைல் கோபுரத்தின் உச்சியில் ஏறி, கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இந்த பரபரப்பு சம்பவம் சஸ்னி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட லுட்சன் சாலை பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை நண்பகலில் நடந்ததுள்ளது. சுமார் 30 வயது மதிக்கத்தக்க பூஜா என்ற பெண் திடீரென ஒரு மொபைல் டவரின் மீது ஏறுவதை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். சில நிமிடங்களிலேயே அங்கு பெரிய திரளான மக்கள் கூடி அந்த பெண்ணை கீழே வருமாறு எச்சரித்துள்ளனர். ஆனால் யாரையும் பொருட்படுத்தாமல் அந்த பெண் டவரின் உச்சி வரை சென்றுள்ளார். சம்பவம் தீவிரமடையும் சூழலில் காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் உடனடியாக தகவல் பெற்று சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
காவல்துறை தகவலின்படி, பூஜா என அடையாளம் காணப்பட்ட அந்தப் பெண்ணுக்கு, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஹத்ராஸ் பகுதியில் உள்ள பர்மானே கிராமத்தைச் சேர்ந்த ஒருவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்திற்குப் பிறகு அவர் தனது கணவரின் குடும்பத்துடன் வாழ்ந்து வந்துள்ளார். ஆனால், திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி இல்லாமல் இருந்ததாகவும், அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்த மற்றொரு நபரை காதலிப்பதாகவும், முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. செவ்வாய்க்கிழமை மதியம் தனது மாமியார் வீட்டிலிருந்து வெளியேறிய பூஜா, திடீரென மொபைல் டவரில் ஏறி தனது கோரிக்கையை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது. அதாவது “என்னை என் காதலனுடன் சேர்த்து வைத்தால் தான் கீழே இறங்குவேன்” என்று அவர் வலியுறுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சம்பவ இடத்திற்கு வந்த சஸ்னி காவல் நிலைய அதிகாரி மற்றும் தீயணைப்பு படையினருடன் இணைந்து அந்தப் பெண்ணை கீழே இறங்குமாறு பலமுறை கேட்டுக்கொண்டனர். கடும் வெயிலிலும், ஆபத்தான உயரத்தில் இருந்தபோதும், தனது கோரிக்கை நிறைவேற்ற படாத வரை கீழே இறங்க போவதில்லை என மறுத்துள்ளார் பூஜா. அவர் பல மணி நேரம் கீழே இறங்காமல் இருந்ததால் அங்கு மக்கள் கூட்டம் கூடி, நெரிசலானதால், நிலைமை மேலும் பதற்றமடைந்தது.
இறுதியில், நீண்ட நேர பேச்சுவார்த்தை மற்றும் சமரச முயற்சிகளுக்குப் பிறகு, அதிகாரிகள் பூஜாவை பாதுகாப்பாக கீழே இறக்கினர். சுமார் மூன்று மணி நேரம் கோபுரத்தின் உச்சியில் இருந்த அவர், சோர்வடைந்த நிலையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. “அவருக்கு அறிவுரை வழங்கப்பட்ட பிறகு, இறுதியில் அவர் பாதுகாப்பாக கீழே இறக்கப்பட்டார்” என காவல்துறை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த பெண் காதலனுடன் தான் வாழ விரும்புவதாகவும் தெரிகிறது.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது. மேலும் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடப்பதாகவும் செய்திகள் வருகிறது. திருமண உறவுகள், தனிப்பட்ட விருப்பங்கள் மற்றும் சமூக அழுத்தங்கள் ஆகியவை எவ்வாறு இப்படிப்பட்ட அதிர்ச்சிகரமான நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கின்றன என்பது குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்தச் சம்பவம், குடும்ப மற்றும் உறவு பிரச்சனைகளை சரியான முறையில் கையாள வேண்டிய அவசியத்தையும், மனநல ஆதரவு எவ்வளவு முக்கியம் என்பதையும் மீண்டும் ஒரு முறை நினைவூட்டுகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.