க்ரைம்

“மைத்துனருடன் கள்ளத்தொடர்பு" கணவனை கொன்று கிணற்றில் வீசி நாடகம் - செல்போன் உரையாடலால் சிக்கிய மனைவி!

போலீசாரின் விசாரணைக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு தராமல் இருந்ததால் சந்தேகம் அடைந்து

Muthu Lakshmi

வேப்பூர் அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு இளைஞர் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட விவகாரத்தில் மனைவி உள்ளிட்ட மூன்று பேர் கைது.

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே ஒரங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் இளையராஜா. இவர் கடந்த 12ம் தேதி (வியாழக்கிழமை) கிராமத்தின் அருகில் உள்ள கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த விவகாரம் குறித்து சிறுபாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் தற்போது இளையராஜாவின் மனைவி அஸ்வினிதா கைது செய்யப்பட்டுள்ளார். போலீசாரின் விசாரணைக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு தராமல் இருந்ததால் சந்தேகம் அடைந்து அவரது செல்போன் எண் மற்றும் அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு தீவிர ஆய்வு செய்தனர். தீவிர விசாரணை செய்ததில் இளையராஜாவின் சித்தி மகனான பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவருக்கும் இளையராஜாவின் மனைவி அஸ்வினிதாவுக்கும் கள்ள தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்த சித்தி மகன் வெங்கடேசனை பிடித்து விசாரணை செய்ததில் சம்பவம் நடைபெற்ற அன்று இளையராஜாவும் வெங்கடேசனும் கீழகல்பூண்டி கிராமத்தில் உள்ள அரசு மதுபான கடையில் மது வாங்கி சென்றுள்ளனர். அதையடுத்து அருகில் உள்ள பகுதியில் மது அருந்தி கொண்டிருக்கும் பொழுது இளையராஜா வெங்கடேசனிடம், “தனது மனைவியுடன் ஏன் தொடர்பு வைத்துள்ளாய்” என்று கோவமாக கேட்டுள்ளார். இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் வெங்கடேசன் இளையராஜாவை தாக்கியதில் இளையராஜா மயங்கி விழுந்துள்ளார். இதனை அடுத்து வெங்கடேசன் இளையராஜாவை தனது காரில் தூக்கி போட்டு கொண்டு பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊரான அகரம் கிராமத்திற்கு சென்றுள்ளார்.

பின்னர் அங்கிருந்த வெங்கடேசனின் நண்பர் செல்வம் என்பவரை அழைத்துக் கொண்டு கீழ்கல்பூண்டியில் இருந்த இளையராஜாவின் இருசக்கர வாகனத்தை செல்வத்தை ஓட்டி வர சொல்லி உள்ளார். இதற்கிடையில் இளையராஜாவின் சொந்த ஊரான ஒரங்கூர் கிராமத்தின் அருகில் உள்ள கிணற்றில் இளையராஜாவின் உடலை வீசியுள்ளனர். யாருக்கும் சந்தேகம் வராத வகையில் கிணற்றின் அருகிலேயே இளையராஜாவின் இருசக்கர வாகனத்தையும் நிறுத்திவிட்டு சென்றுள்ளனர். 

விசாரணையில் தெரியவந்த இந்த சம்பவத்தை அடுத்து, வெங்கடேசன், அவருக்கு துணையாக இருந்த அவரது நண்பர் செல்வம் மற்றும் கணவரின் கொலையில் இவர்கள் இருவருக்கும் உடந்தையாக இருந்த இளையராஜாவின் மனைவி அஸ்வினிதா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளது காவல்துறை. கணவரின் சித்தி மகனுடன் ஏற்பட்ட கள்ளத்தொடர்பின் காரணமாக கணவன் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், மனைவி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்