திருநெல்வேலியில் கடந்த ஆண்டு நடந்த கொலைக்கு பழிக்குப் பழியாக, தண்ணீர் கேன் விநியோகம் செய்யும் வாலிபர் ஒருவர் நள்ளிரவில் டீக்கடை அருகே சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி டவுன் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடாசலம் என்ற ஆனந்த் (19). தண்ணீர் கேன் போடும் தொழில் செய்து வரும் இவருடைய தந்தை பெயர் பார்த்திபன். ஆனந்த்தின் பெற்றோர் தற்போது உயிருடன் இல்லை. ஆனந்த் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் தனது நண்பர் ஒருவருடன் திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் உள்ள ஒரு டீக்கடைக்கு டீ குடிக்க வந்துள்ளார். அப்போது அங்கு வந்த மூன்று பேர் கொண்ட கும்பல், ஆனந்தை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடியதாகக் கூறப்படுகிறது. இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த ஆனந்த் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சந்திப்பு காவல்துறையினர், ஆனந்தின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், கடந்த 2023-ம் ஆண்டு டவுன் பகுதியில் உள்ள தனியார் பள்ளி அருகே சக்தி என்பவர் வெட்டிக் கொன்ற வழக்கில், தற்போது உயிரிழந்த ஆனந்த் முக்கிய குற்றவாளியாக இருந்துள்ளார். எனவே, அந்த கொலைக்கு பழிக்குப் பழியாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என காவல்துறை சந்தேகிக்கிறது.
கொலையில் ஈடுபட்டவர்கள் இசக்கி ராஜா, வசந்த் மற்றும் வெங்கடேஷ் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தலைமறைவாக உள்ள அவர்களைப் பிடிக்க காவல்துறை தனிப்படை அமைத்து தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
திருநெல்வேலி மாநகர் மற்றும் மாவட்டப் பகுதிகளில் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் மட்டும் ஐந்து கொலைகள் நடந்த நிலையில், செப்டம்பர் மாதத்தின் முதல் கொலையாக இந்த பழிவாங்கும் கொலை பதிவாகியுள்ளது. மேலும் பெருபான்மையான சமயங்களில் இளைஞர்கள் தான் இந்த கொலைச்செயலில் ஈடுபடுகின்றனர். நடப்பாண்டில் இதுவரை மாநகர் மற்றும் மாவட்டப் பகுதிகளில் மொத்தம் 34 கொலைகள் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.