க்ரைம்

‘என் ஆளுக்கு ஏன்டா தப்பா மெசேஜ் பண்ண?’ பள்ளி நண்பனை தீர்த்துக்கட்டிய இளைஞர்! கல்லை கட்டி கிணற்றில் வீசிய கொடூரம்?

அந்த இளம் பெண்ணை பழிவாங்கும் நோக்கில் தினமும் இரவு நேரத்தில் தனது செல்போனில் இருந்து, அந்த பெண்ணிற்கு ஆபாச வீடியோக்கள் மற்றும்...

Muthu Lakshmi

திருவள்ளூர் மாவட்டம், மாங்காடு அடுத்த கொழுமணிவாக்கம், ராஜ் நகரை சேர்ந்தவர் யுவனேஷ் (20). இவர் அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை கடந்த சில தினங்களாக ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால், அந்த இளம்பெண்ணோ யுவனேஷின் சிறு வயது பள்ளி நண்பரான அதே பகுதி தோப்பு தெருவைச் சேர்ந்த தேகதயாளன் (எ) விக்கி (20)-யை உயிருக்கு உயிராக காதலித்துவந்துள்ளார்.

இந்த காதல் விவகாரம் யுவனேஷிற்கு தெரிய வரவே, தான் ஒருதலையாக காதலித்து வந்த அந்த இளம்பெண் தன்னை காதலிக்காமல் தனது நண்பனை காதலித்ததால் கடும் ஆத்திரமடைந்துள்ளார். இதனால், அந்த இளம் பெண்ணை பழிவாங்கும் நோக்கில் தினமும் இரவு நேரத்தில் தனது செல்போனில் இருந்து, அந்த பெண்ணிற்கு ஆபாச வீடியோக்கள் மற்றும் குறுஞ்செய்திகளை அனுப்பி பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. 

இதனால் மனமுடைந்த இளம்பெண், தனது காதலனிடம் இதனை சொல்லி அழுதுள்ளார். தனது காதலி என்று தெரிந்த பின்பும், நண்பனே இவ்வாறு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி தொந்தரவு செய்கிறானே, இனிமேலும் அவனை உயிரோடு விட்டு வைக்கக் கூடாது என்று முடிவு செய்துள்ளார் விக்கி. நேற்று தனது மற்றொரு நண்பனான மாங்காடு, சீனிவாச கர் 3- வது தெருவை சேர்ந்த பார்த்திபன் (26) என்பவனை துணைக்கு அழைத்துக்கொண்டு சென்றுள்ளார். இருவரும் யுவனேஷை “மது அருந்தலாம் வா” என்று நைசாக பேச்சு கொடுத்து, யாரும் இல்லாத கொழுமணிவாக்கத்தில் உள்ள காலி மைதானத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு யுவனேஷிற்கு அளவுக்கு அதிகமாக மது கொடுத்து குடிக்க வைதுள்ளனர். பின்னர், போதை தலைக்கேறிய யுவனேஷ் தள்ளாடிய போது, “ஏன்டா என்ன தைரியம் இருந்தால் எனது காதலிக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்புவாய்” என்று கூறி, அவனை விக்கியும், பார்த்திபனும் சேர்ந்து அருகில் கிடந்த பாட்டில் மற்றும் உருட்டுக் கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளனர். 

இதில் படுகாயமடைந்த யுவனேஷ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தான். பின்னர், கொலைச் சம்பவம் நடந்தது வெளியில் யாருக்கும் தெரியாமல் இருப்பதற்காக, இருவரும் சேர்ந்து யுவனேஷ் உடலை பெரிய கல்லுடன் சேர்த்து மாடு கட்டுவதற்கு பயன்படுத்தும் கயிறு மூலம் இறுக்கி கட்டி,  அருகில் இருந்த பாழடைந்த கிணற்றில் வீசி சென்றுள்ளனர். இந்நிலையில், நேற்று இரவு வெகுநேரமாகியும் யுவனேஷ் வீட்டிற்கு வராததால், சந்தேகம் அடைந்த உறவினர்கள் அவரை தேடத் தொடங்கினர்.

இதனால் பயந்து போன கொலையாளிகள் இருவரும், எப்படியும் போலீசில் மாட்டிக் கொள்வோம் என்று நினைத்து நேற்று இரவு மாங்காடு காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளனர். மேலும் நடந்த உண்மையை போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர். அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களை கொலை சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர். அங்கு கொலையாளிகள் இருவரும் சுட்டிக் காட்டிய பாழுங்கிணற்றில் இருந்து தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் யுவனேஷ் உடலை போலீசார் மீட்டனர். 

பின்னர், அதனை பிரேதப் பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தேகதயாளன் (எ) விக்கி மற்றும் அவரது நண்பர் பார்த்திபன் ஆகிய இருவர் மீதும் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்தனர். இதனிடையே, நிஜமாகவே காதலிக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதால் யுவனேஷ் கொலை செய்யப்பட்டானா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று பல்வேறு கோணங்களில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதலிக்கு செல்போனில் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி தொந்தரவு கொடுத்த பள்ளி நண்பனை கொடூரமாக அடித்து கொலை செய்து, பாழுங் கிணற்றில் உடலை வீசிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்