க்ரைம்

"இந்தியாவுக்கே அவமானம்!"... சிங்கப்பூர் மருத்துவமனையில் நர்ஸ் செய்த அசிங்கம்!

உடனடியாக எந்த எதிர்வினையும் ஆற்றாமல், அந்த இடத்தை விட்டு விலகிச் சென்று, தனது தாத்தாவின் படுக்கை அருகே சென்றுள்ளார்...

மாலை முரசு செய்தி குழு

சிங்கப்பூரில் உள்ள புகழ் பெற்ற ராஃபிள்ஸ் மருத்துவமனையில் பணியாற்றி வந்த இந்திய நாட்டவரான ஒரு ஆண் செவிலியர், மருத்துவமனைக்கு வந்த ஆண் பார்வையாளர் ஒருவரைத் தவறாகத் தொட்டு துன்புறுத்திய குற்றத்திற்காக, ஓராண்டு மற்றும் இரண்டு மாதங்கள் சிறைத் தண்டனை மற்றும் பிரம்படித் தண்டனை பெற்றுள்ளார்.

சம்பவம் நடந்த போது, குற்றஞ்சாட்டப்பட்ட எலிப் சிவா நாகு (Elipe Siva Nagu), 34, பணியில் இருந்திருக்கிறார். இந்தச் சம்பவம் கடந்த ஜூன் மாதம் நார்த் பிரிட்ஜ் சாலையில் உள்ள மருத்துவமனையில், நோயாளிகளுக்கான கழிப்பறை ஒன்றில் நடந்துள்ளது. அன்று மாலை சுமார் 7:30 மணியளவில், பாதிக்கப்பட்ட அந்த ஆண் பார்வையாளர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தனது தாத்தாவைப் பார்ப்பதற்காக வந்தவர். அவர் கழிப்பறைக்குள் சென்ற போது, சிவா நாகு எட்டிப் பார்த்ததாகக் கூறப்படுகிறது.

பின்னர், அந்தப் பார்வையாளரிடம், தான் அவருக்கு "கிருமி நீக்கம்" (Disinfect) செய்ய வேண்டும் என்று ஒரு பொய்க் காரணத்தைக் கூறிய சிவா நாகு, அவர் கையில் சோப்பை எடுத்து வைத்ததுடன், அவரைத் தவறான முறையில் தொட்டுள்ளார். இந்த எதிர்பாராத சம்பவத்தால் அதிர்ச்சியிலும் உறைந்துபோன அந்த நபர், உடனடியாக எந்த எதிர்வினையும் ஆற்றாமல், அந்த இடத்தை விட்டு விலகிச் சென்று, தனது தாத்தாவின் படுக்கை அருகே சென்றுள்ளார். பிறகு இந்த சம்பவம் குறித்துச் சில நாட்களுக்குப் பிறகு, ஜூன் 21-ஆம் தேதி அதிகாரிகளுக்குப் புகார் அளிக்கப்பட்டதையடுத்து, இரண்டு நாட்களுக்குப் பிறகு, அதாவது ஜூன் 23-ஆம் தேதி சிவா நாகு கைது செய்யப்பட்டார்.

இந்தச் செயலால் பாதிக்கப்பட்டவருக்கு மனரீதியான வேதனை ஏற்பட்டதாகவும், சம்பவத்தின் பயங்கரமான நினைவுகள் திரும்பத் திரும்ப வந்து அவரைத் துன்புறுத்தியதாகவும் நீதிமன்றத்தில் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தன் மீதான குற்றத்தை சிவா நாகு நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, கடந்த வெள்ளிக்கிழமை அவருக்குச் சிறைத் தண்டனையும் இரண்டு பிரம்படிகளும் விதிக்கப்பட்டன. இந்தச் சம்பவம் நடந்த பிறகு, சிவா நாகு தனது நர்ஸிங் பணியில் இருந்து மருத்துவமனை நிர்வாகத்தால் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.