கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் அருகே உள்ள பாசார் கிராமத்தைச் சேர்ந்தவர் அமுதா. இவருக்கும் கள்ளக்குறிச்சி அருகே தண்டலை கிராமத்தைச் சேர்ந்த கோகுல் என்பவருக்கும் சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிக்கு 8 மாத ஆண் குழந்தை உள்ளது. திருமணத்தின் போது பெண் வீட்டார் தரப்பில் 21 பவுன் தங்க நகைகளை வரதட்சணையாக வழங்குவதாக மாப்பிள்ளை வீட்டாரிடம் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால், திருமணத்தின் போதே 21 பவுன் நகைகளையும் வழங்க முடியாத நிலையில், அடுத்த 2 ஆண்டுகளில் படிப்படியாக வழங்குவதாக பெண் வீட்டார் தெரிவித்துள்ளனர். அதன்படி இதுவரை 18 பவுன் தங்க நகைகள் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மீதமுள்ள 3 பவுன் நகைக்காக கொடுமை?
இந்நிலையில், மீதமுள்ள 3 பவுன் தங்க நகைகளை வரதட்சணையாக வழங்கவில்லை எனக் கூறி, கோகுல் மற்றும் அவரது குடும்பத்தினர் அமுதாவிடம் தொடர்ந்து வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக அமுதா குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். இதற்கிடையே, நேற்று காலை சுமார் 11 மணியளவில் அமுதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கோகுல் மற்றும் அவரது உறவினர்கள் அமுதாவின் வீட்டிற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து பதறியடித்து சம்பவ இடத்திற்கு சென்ற அமுதாவின் தாய் மற்றும் உறவினர்கள், அவரது உடலை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.
உடலில் காயங்கள்.. காதில் ரத்தம்
அமுதாவின் உடல் முழுவதும் காயங்கள் இருந்ததாகவும், காதில் ரத்தம் வழிந்து காய்ந்த நிலையில் இருந்ததாகவும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், அமுதா தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும், அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் அமுதாவின் குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர். அதில், தங்களது மகளை அடித்து கொலை செய்திருக்கலாம் என்றும், வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள கோகுல் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
எஸ்.பி. அலுவலகத்தில் கதறிய தாய்
நேற்று புகாரளித்த நிலையில் தங்களது புகார் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறி, அமுதாவின் தாய் மற்றும் உறவினர்கள் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு சென்றனர். தங்கள் மகளின் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். மேலும், “வரதட்சணை கொடுமையால் இனி தமிழகத்தில் எந்தப் பெண்ணுக்கும் இதுபோன்ற நிலை ஏற்படக்கூடாது” எனக் கூறி, அங்கிருந்த காவலரின் காலில் விழுந்து கண்ணீர் மல்க முறையிட்டனர்.
உடற்கூறு ஆய்வுக்காக காத்திருக்கும் உடல்
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று, அமுதாவின் குடும்பத்தினரை அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, உயிரிழந்த அமுதாவின் உடல் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது. உடற்கூறு ஆய்வு அறிக்கை மற்றும் போலீசாரின் விசாரணைக்குப் பின்னரே அமுதாவின் உயிரிழப்பு தற்கொலையா அல்லது வேறு காரணமா என்பது குறித்து தெளிவான தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சம்பவம் கள்ளக்குறிச்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்