rubesh  
க்ரைம்

“மகனை கத்தரிக்கோலால் குத்தி கொன்ற தந்தை” - திருமணத்திற்கு பிறகும் காதலுக்கு தொடர்ந்த எதிர்ப்பு.. வீட்டு வாசலில் சடலமான டாட்டூ ஆர்ட்டிஸ்ட்!

ஆத்திரமடைந்த ஏழுமலை, கையில் வைத்திருந்த கத்திரிக்கோலால் மகன் ரூபேஷை சரமாரியாக குத்தி...

Mahalakshmi Somasundaram

காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் 28 வயதுடைய ரூபேஷ், இவர் சென்னையில் உள்ள தனியார் சலூனில் டாட்டூ ஓவியராக பணியாற்றி வந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதலித்த பெண்ணை திருமணம் செய்து கொண்ட நிலையில் பெற்றோருடன் வாசிக்காமல் காஞ்சிபுரத்திலேயே வேறு பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து மனைவியுடன் தனியாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்களுக்கு தற்போது ஒரு வயதில் குழந்தை உள்ளது. காதல் திருமணத்திற்கு பெற்றோர் சம்மதம் தெரிவிக்காததால், திருமணத்திற்குப் பிறகும் ரூபேஷுக்கும் அவரது பெற்றோருக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகள் மற்றும் குடும்பத் தகராறுகள் ஏற்பட்டதாக தெரிகிறது.

இருப்பினும், அவ்வப்போது பெற்றோர்களிடம் ரூபேஷ் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி நன்றாக பழக்க முயற்சித்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு ரூபேஷின் குழந்தைக்கு முதல் பிறந்தநாள் விழா நடைபெற்றுள்ளது. அந்த விழாவில் கலந்து கொள்ள ரூபேஷ் அவரது பெற்றோர்களை அழைத்த நிலையில் அவர்கள் கோபம் காரணமாக வரவில்லை என கூறப்படுகிறது. இதனால் ரூபேஷ் மிகுந்த மனவருத்தத்தில் இருந்ததாகவும், குடும்பத்தில் நீண்ட நாட்களாக நிலவி வந்த விரிசல் மேலும் அதிகரித்ததாகவும் சொல்லப்படுகிறது.

இந்த சூழலில், நேற்று இரவு ரூபேஷ் மதுபோதையில் தனது தந்தை ஏழுமலையை சந்திக்க வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, குழந்தையின் பிறந்தநாள் விழாவிற்கு வராதது மற்றும் நீண்ட காலமாக இருந்து வந்த குடும்பப் பிரச்சினைகள் குறித்து தந்தையிடம் கேள்வி எழுப்பிய நிலையில் வீட்டின் வாசல் பகுதியில் தந்தை-மகன் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றி இருவருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த ஏழுமலை, கையில் வைத்திருந்த கத்திரிக்கோலால் மகன் ரூபேஷை சரமாரியாக குத்தி கொலை செய்திருக்கிறார். இதில் பலத்த காயமடைந்த ரூபேஷ் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த சிவகாஞ்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் ரூபேஷின் உடலை கைப்பற்றி, உடற்கூறு ஆய்வுக்காக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் கத்தரிக்கோல் உள்ளிட்ட முக்கிய ஆதாரங்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதல் திருமணமா விவகாரத்தில் தந்தை-மகன் இடையேயான மோதல் கொலையில் முடிந்த சம்பவம் காஞ்சிபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.