க்ரைம்

“பைனான்சியர் ஊழியருக்கு அரிவாள் வெட்டு” - வீடு கட்ட வாங்கிய கடன்.. பணம் கேட்டு பெண்களை மிரட்டியதால் ஆத்திரம்!

எனவே குணாநிதி பத்துக்கும் மேற்பட்ட நபர்களுடன் சென்று வீட்டில் பெண்களிடம் சண்டை போட்டு வந்ததாக கூறப்படுகிறது.

Mahalakshmi Somasundaram

காஞ்சிபுரம் மாவட்டம், சின்ன காஞ்சிபுரம் பகுதியில் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த தனியார் நிதி நிறுவனம் வீடு கட்டுவதற்கு, கடன் வழங்கி வருகிறது. காஞ்சிபுரத்தை சேர்ந்த 60 வயதுடைய விஷ்ணு என்பவர் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு வீடு கட்டுவதற்காக முதல் தவணையாக 12 லட்சம் கடன் வாங்கியுள்ளார். முறையாக மாதந்தோறும் பணம் செலுத்தாததால், ஊழியர்கள் அவ்வப்போது அவரது வீட்டிற்கு சென்று வீட்டை காலி செய்யுமாறு மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது.

பலமுறை தவணைகள் மீறியும் விஷ்ணு கட்டாமல் இருந்துள்ளார் இதனால் விஷ்ணுவிடம் பணத்தை வசூலிக்கும் பொறுப்பை நிதி நிறுவன ஊழியர் குணாநிதியிடம் நிறுவனம் ஒப்படைத்துள்ளது. குணாநிதி பலமுறை கேட்டும் விஷ்ணு பணத்தை திருப்பி செலுத்தாமல் இருந்துள்ளார். எனவே குணாநிதி பத்துக்கும் மேற்பட்ட நபர்களுடன் சென்று வீட்டில் பெண்களிடம் சண்டை போட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த விஷ்ணு இன்று நிதி நிறுவனத்திற்கு சென்று குணாநிதியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் விஷ்ணு மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து குணாநிதியை சரமாரியாக வெட்டியுள்ளார்.

இதனால் காயமடைந்த குணாநிதி ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியுள்ளார். இதனை பார்த்த அங்கிருந்த ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து அவரை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு குணாநிதிக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் இது குறித்து போலீசில் தகவல் அளித்துள்ளனர். மருத்துவமனைக்கு வந்த போலீசார் குணாநிதியிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதற்கிடையே சம்பவத்தில் ஈடுபட்ட விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்தில் சரணடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பகலில் நிதி நிறுவன ஊழியருக்கு அரிவாள் வெட்டு விழுந்திருக்கும் சம்பவம் காஞ்சிபுரம் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.