காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த படப்பை அருகே ஆதனஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் 36 வயதுடைய கங்காதரன். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 29 வயதுடைய நந்தினி என்பவருக்கு கடந்த 12 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியருக்கு 7 மற்றும் 9 வயதில் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ள நிலையில் கங்காதரன் லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். எனவே மூன்று அல்லது ஆறு மாதங்களுக்கு ஒரு முறை தான் குடும்பத்துடன் இருப்பதாக சொல்லப்படுகிறது.
இதன் காரணமாக நந்தினி வீட்டிலேயே இருந்து மகன்களை பார்த்து வந்திருக்கிறார். அவ்வப்போது மற்றும் வீட்டிற்கு வந்து செல்லும் கணவர் கங்காதரனுக்கு மனைவி நந்தினியின் நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் அடிக்கடி கணவன் மனைவி இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வந்திருக்கிறது. இதனால் ஆத்திரமடைந்த நந்தினி தனது மகன்களுடன் அவரது பெரியம்மா வீட்டிற்கு சென்றுள்ளார். எனவே கங்காதரன் தனது மனைவியை வீட்டுக்கு அழைத்தும் அவர் செல்ல மறுத்துவிட்டதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் குடிபோதையில் இருந்த கங்காதரன் மீண்டும் தன் மனைவியை தேடி சாலமங்கலத்திற்கு சென்று அவரிடம் சமாதான பேசியுள்ளார். அப்போது மீண்டும் மனைவி மீது சந்தேகமடைந்து நந்தினியை தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கணவன் மனைவி இடையே வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த கங்காதரன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து நந்தினியின் கழுத்தை கரகரவென அறுத்துள்ளார். இதில் துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் மிதந்து நந்தினி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மணிமங்கலம் காவல் துறையினர் நந்தினியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து கங்காதரனை கைது செய்து மணிமங்கலம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கணவன் மனைவி கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.