க்ரைம்

“பெட்ரோல் ஊற்றி இளம்பெண் தற்கொலை” - முடி உதிர்விற்காக அழகு நிலையத்தில் சிகிச்சை.. மன உளைச்சலால் நடந்த கொடூரம்!

அஸ்வினி உடல் கருகி உயிரிழந்து சடலமாக கீழே விழுந்துள்ளார்..

Mahalakshmi Somasundaram

கன்னியாகுமரி மாவட்டம், இரணியல் அருகே உள்ள காரங்காடு பகுதியை சேர்ந்தவர் ஞானசெல்வன் இவரது மனைவி ரூபி ஆன்றணி. இந்த தம்பதியருக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர் ஞான செல்வன் வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில் ரூபி ஆன்றணி மகள்களுடன் காரங்காடு பகுதியில் உள்ள சொந்த வீட்டில் வசித்து வருகிறார். இன்று காலை ரூபி ஆன்றணி தனது 19 வயதான மூத்த மகள் அஸ்வினியை வீட்டில் விட்டு விட்டு இளைய மகளுடன் அருகில் உள்ள தேவாலயத்திற்கு சென்றுள்ளார்.

அப்போது வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் வெடித்து சிதறும் சத்தம் கேட்டதால் அக்கம்பக்கத்தினர் அங்கு வந்து பார்த்த போது அஸ்வினியின் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்து கொண்டிருப்பதை கண்ட அவர்கள் தண்ணீர் ஊற்றி அணைக்க முயற்சி செய்துள்ளனர். வீட்டு கதவுகள் பூட்டப்பட்டிருந்ததால் பின்பக்க கதவை உடைத்து உள்ளே சென்ற போது அஸ்வினி உடல் கருகி உயிரிழந்து சடலமாக கீழே விழுந்துள்ளார்.

இதையடுத்து அக்கம்பக்கத்தினர் தாயார் ரூபி ஆன்றணிக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவல் அறிந்து வந்த அவர் மகளின் சடலத்தை கண்டு கதறி அழுத நிலையில் அங்கு வந்த இரணியல் போலீசார் நடத்திய விசாரணையில் 19-வயதான அஸ்வினி நாகர்கோவில் பகுதியில் உள்ள தனியார் கலைக் கல்லூரியில் விலங்கியல் முதலாம் ஆண்டு பயின்று வருவதும் முடி உதிர்வு பிரச்சனையில் சிக்கிய அஸ்வினி நாகர்கோவில் பகுதியில் உள்ள தனியார் அழகு நிலையத்தில் முடி உதிர்வு பிரச்சனைக்கு சிகிச்சை பெற்றுள்ளார்.

முடி உதிர்விற்காக தொடர் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு தீராத தலைவலி மற்றும் சைனஸ் பிரச்சனை ஏற்பட்டதால் கடந்த வாரம் தலைவலி பிரச்சனைக்கு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வீடு திரும்பியதாகவும் அன்று முதல் மன உளைச்சலில் இருந்த அஸ்வினி வீட்டில் பைக்கிற்கு பயன்படுத்துவதற்காக பாட்டிலில் வாங்கி வைத்திருந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து அஸ்வினியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த இரணியல் போலீஸார் தாயார் ரூபி ஆன்றணி கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முடி உதிர்வால் இளம்பெண் பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வாகாது, மன உளைச்சல் இருந்தால் அழைக்க வேண்டிய எண்-1800-599-0019.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.