கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே உள்ள மீனவ கிராமத்தை சேர்ந்த 17-வயது சிறுமி குடும்ப வறுமையால் படிப்பை கைவிட்டு அந்த பகுதியில் உள்ள கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த நவம்பர் 10-ஆம் தேதி கடைக்கு செல்வதாக கூறி சென்ற சிறுமி மாயமான நிலையில் அவரது பெற்றோர் சிறுமியை தேடி வந்தனர். இந்த நிலையில் அடுத்த நாள் வீடு திரும்பிய சிறுமி தனது இன்ஸ்டாகிராம் காதலன் பீட்டர் என்பவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி தன்னை பைக்கில் கன்னியாகுமரிக்கு அழைத்து சென்று அறையில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்திருக்கிறார்.
மேலும் தான் அணிந்திருந்த தங்க கம்மல் மோதிரத்தை வாங்கி கொண்டு பைக்கில் ஏற்றி அம்மாண்டிவிளை பகுதியில் இறக்கி தவிக்க விட்டு தப்பி சென்றதாகவும் தன்னை காதலன் ஏமாற்றியதை உணர்ந்து வீடு திரும்பியதாகவும் கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் இது குறித்து குளச்சல் மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்த நிலையில் போக்ஸோ வழக்கு பதிவு செய்த போலீசார் கன்னியாகுமரியில் அவர்கள் தங்கியிருந்த விடுதியை அடையாளம் கண்டு அங்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது சிசிடிவி கேமரா இல்லாத அந்த விடுதியில் போலியான ஆதார் எண் கொடுத்து இன்ஸ்டாகிராம் காதலன் அறை எடுத்து சிறுமியுடன் தங்கியது தெரியவந்தது.
இன்ஸ்டாகிராம் ஐடியும் லாகவுட் செய்யப்பட்டிருந்ததால் சைபர் கிரைம் போலீஸாரின் உதவியுடன் சிறுமியிடம் அவன் தொடர்பு கொண்ட செல்போன் எண்ணை ஆய்வு செய்த போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. எனவே செல்போனின் ஐ.எம்.இ நம்பர் அடிப்படையில் ஆய்வு செய்த போது அந்த செல்போன் வேறு புதிய எண்ணுடன் தேனி மாவட்டம் கூடலூரில் உள்ள வீட்டில் பயன்பாட்டில் இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து தேனி மாவட்டம் கூடலூர் விரைந்த போலீசார் செல்போன் பயன்பாட்டில் இருந்த வீட்டிற்கு சென்று அங்கு இருந்த பெண்ணிடம் நடத்திய விசாரணையில் அந்த தில்லாலங்கடி போலி இன்ஸ்டாகிராம் காதலன் கேரளா மாநிலம் இடுக்கி கட்டப்பனை பகுதியை சேர்ந்த 24- வயதான பினு என்பதும் டீ மாஸ்டரான இவர் திருவிழா கடைகளுக்கு சென்று குலுக்கி சர்பத் வியாபாரம் செய்து வந்ததும் தெரியவந்தது.
மேலும் இன்ஸ்டாகிராமில் காதலித்த ஒரு சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி அழைத்து வந்து தன்னிடம் ஒரு நாள் தங்க அடைக்கலம் கேட்டதாகவும் இரவு தங்கியவர் காலையில் சொந்த ஊரான கேரளா மாநிலம் இடுக்கி அருகே உள்ள கட்டபனை கிராமத்திற்கு செல்வதாக கூறி சிறுமியுடன் சென்று விட்டதாகவும் தெரிவித்த அந்த பெண் பினுவின் புகைப்படத்தையும் போலீஸாரிடம் வழங்கியுள்ளார்.
ஏற்கனவே ஒரு சிறுமியை ஏமாற்றி எஸ்கேப் ஆனவர் மற்றொரு சிறுமியையும் ஏமாற்றி அழைத்து வந்துள்ளதை அறிந்து அதிர்ச்சி அடைந்த போலீசார் கேரள மாநிலம் இடுக்கி கட்டப்பனை கிராமத்திற்கு சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டனர். நூற்றுக்கணக்கான விடுதிகள் உள்ள சுற்றுலா தலம் என்பதால் தேடி கண்டு பிடிக்க அங்குள்ள விடுதி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளை தொடர்பு கொண்ட போலீசார் அவர்களிடம் பினுவின் புகைப்படத்தை கொடுத்து கண்டுபிடிக்க உதவுமாறு கேட்டுள்ளனர்.
உடனடியாக விடுதி உரிமையாளர் சங்க வாட்ஸ்அப் குரூப்பில் பினுவின் புகைப்படத்தை பகிர்ந்த நிர்வாகிகள் இந்த புகைப்படத்தில் உள்ள நபர் இடுக்கி கட்டப்பனை பகுதியில் உள்ள ஏதாவது விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்தால் உடனடியாக சங்க நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவிக்குமாறு மெசேஜ் அனுப்பியுள்ளனர். மெசேஜை பார்த்த பத்தாவது நிமிடத்தில் ஒரு விடுதியின் மேலாளர் இந்த நபர் சிறுமி ஒருவருடன் தங்களது விடுதியில் தங்கி இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அந்த விடுதிக்கு சென்ற போலீசார் பினுவை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையின் போது பினு அழைத்து வந்த சிறுமி கன்னியாகுமரி மாவட்டம் கோட்டார் பகுதியை சேர்ந்த தனது மற்றொரு இன்ஸ்டாகிராம் காதலி என்பதும் ஏற்கனவே இந்த சிறுமியை அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்து போக்சோ வழக்கில் சிக்கி சிறை சென்று ஜாமீனில் வந்திருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து பினுவை கைது செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியுள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.