கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமத்தில், பி.இ. பட்டதாரி இளைஞர் ஒருவர் வீட்டில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அஞ்சு கிராமத்தைச் சேர்ந்தவர் 63 வயதுடைய திருமால். இவர் முட்டை மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு மனைவி, திருமணமான ஒரு மகள் மற்றும் 26 வயதுடைய ஜினேஷ் மூர்த்தி என்ற மகன் உள்ளார்.
பி.இ. பட்டப்படிப்பை முடித்த ஜினேஷ் மூர்த்தி, தனது தந்தையுடன் இணைந்து குடும்பத் தொழிலில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில், அவர் மேற்படிப்பு தொடர வேண்டும் என பெற்றோர் விருப்பம் தெரிவித்ததாகவும், ஆனால் அதில் ஜினேஷ் மூர்த்திக்கு விருப்பம் இல்லாததால் வீட்டில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று இரவு தனது அறைக்குச் சென்று உறங்கிய ஜினேஷ் மூர்த்தி, மறுநாள் காலை நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் பெற்றோர் அவரது அறைக்குச் சென்று பார்த்துள்ளனர்.
அப்போது அவர் அறையில் தூக்கிட்டு உயிரிழந்த நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் அவரை உடனடியாக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். சம்பவம் குறித்து ஜினேஷ் மூர்த்தியின் தந்தை திருமால் அளித்த புகாரின் பேரில் அஞ்சுகிராமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணையின்போது, ஜினேஷ் மூர்த்தி கைப்பட எழுதியதாகக் கூறப்படும் ஒரு கடிதம் போலீசாருக்கு கிடைத்துள்ளது. அதில், “எனது தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை, பெற்றோருக்கு பாரமாக இருக்க விரும்பவில்லை” என குறிப்பிடப்பட்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர். அந்தக் கடிதத்தின் உண்மைத்தன்மை மற்றும் சம்பவத்தின் பின்னணி குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்தச் சம்பவம் அஞ்சுகிராமம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் - 104
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.