Kanyakumari Murder Case 
க்ரைம்

“கையில் ரத்தம் சொட்டும் கத்தியுடன் தெருவில் சுற்றிய இளைஞர்” - வீட்டுக்குள் சடலமாக கிடந்த பெண்.. தாயை கொன்றும் அடங்காத வெறி!

லீலாவின் வீட்டிற்கு சென்ற சிஜூ, அவரை கத்தியால் குத்தியதுடன், கல்லால் தாக்கியும்...

Mahalakshmi Somasundaram

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே கைதக்குழி நாரகம்விளை பகுதியைச் சேர்ந்தவர் 24 வயதுடைய சிஜூ. இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு தனது தாயை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் ஜாமீனில் வெளியே வந்த சிஜூ, தனது தந்தையுடன் வசித்து வந்துள்ளார். மேலும், சிஜூ மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று முன்தினம் சிஜூ ரத்தக்கறையுடன் கையில் கத்தியை வைத்துக்கொண்டு தெருவில் அங்கும் இங்குமாக சுற்றித்திரிந்ததாக கூறப்படுகிறது. இதனை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து, உடனடியாக களியக்காவிளை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சிஜூவை மடக்கிப் பிடித்து அவரிடம் இருந்த கத்தியை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை ஆசுவாசப்படுத்தி, என்ன நடந்தது என போலீசார் விசாரித்துள்ளனர். ஆனால், சிஜூ எந்த பதிலும் அளிக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. அவரது மனநிலையை கருத்தில் கொண்ட போலீசார், பக்குவமாக சிஜூவை அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது அருகில் உள்ள வீட்டை போலீசார் பார்வையிட்டபோது, அங்கு பெண் ஒருவர் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவரது உடலில் கத்திக்குத்து காயங்களும் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும், அருகே பெரிய கல் ஒன்றும் கிடந்துள்ளது.

இதையடுத்து போலீசார் சிஜூ மற்றும் அப்பகுதி மக்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில், கொலை செய்யப்பட்ட பெண் அதே பகுதியைச் சேர்ந்த அசோக்குமாரின் மனைவி 56 வயதுடைய லீலா என்பதும், அவர் சிஜூவின் உறவினர் என்பதும் தெரியவந்தது. சிஜூவுன் தாய் இறந்த நிலையில் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனக் கருதி லீலா, அவர் மீது அக்கறையுடன் பழகி வந்திருக்கிறார். எனவே சிஜூ அடிக்கடி அவரது வீட்டிற்கு சென்று சாப்பிட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், லீலாவின் வீட்டிற்கு சென்ற சிஜூ, அவரை கத்தியால் குத்தியதுடன், கல்லால் தாக்கியும் கொலை செய்ததாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இதையடுத்து லீலாவின் உடலை கைப்பற்றிய போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் தொடர்பாக சிஜூவை பிடித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கெனவே தாயை கொலை செய்த வழக்கில் சிக்கிய இளைஞர், தற்போது உறவினரான 56 வயது பெண்ணை கத்தியால் குத்தியும் கல்லால் தாக்கியும் கொலை செய்ததாக கூறப்படும் சம்பவம் களியக்காவிளை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்