கர்நாடக மாநிலம் தார்வாட் மாவட்டம், நாவல்குண்ட் தாலுக்காவிற்கு உட்பட்ட ஹனாசி கிராமத்தைச் சேர்ந்த 29 வயதுடைய பிரியங்கா கமலாகர். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பசவராஜ் என்பவருக்கும் கடந்த 2024-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு இருவரும் பசவராஜ் குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில், சில மாதங்களாக தம்பதியினருக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், திருமணத்திற்குப் பிறகு பசவராஜும், அவரது உறவினர்களும் தொடர்ந்து கூடுதல் வரதட்சணையாக பணம் மற்றும் தங்க நகைகளை கேட்டு பிரியங்காவை துன்புறுத்தி வந்ததாக சொல்லப்படுகிறது. மேலும், திருமணமாய் இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையிலும் குழந்தை இல்லை என பிரியங்காவை அவமானப்படுத்து வந்ததாகவும், குழந்தை பிறக்காததிற்கு முழு காரணம் பிரியங்காவின் உடல் எடை தான் எனவும் குற்றம் சாட்டி வந்திருக்கின்றனர். இதன் காரணமாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
வழக்கம் போல சம்பவத்தன்று இருவருக்கும் இடையே வாங்குவம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த பசவராஜ் தனது மனைவி பிரியங்காவை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு போலீசாரிடம் தப்பிக்க பிரியங்காவின் வீட்டிற்கு போன் செய்து அவர் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்ததாக தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர்கள் மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த நாவல்குண்ட் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பிரியங்காவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், கணவர் பசவராஜ் மற்றும் அவரது மூன்று உறவினர்கள் மீது வரதட்சணை கொடுமை மற்றும் வரதட்சணைக் கொலை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
இந்த வழக்கில், தொடர்ச்சியான வரதட்சணை கோரிக்கைகள், உடல் எடையை காரணம் காட்டி அவமானப்படுத்தியது மற்றும் குழந்தை இல்லாதது தொடர்பான குடும்பப் பிரச்சினைகள் கொலைக்கு காரணமா? அல்லது வேறு ஏதேனும் பின்னணி உள்ளதா என்பது குறித்து நாவல்குண்ட் போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி இரண்டு ஆண்டுகளில் வரதட்சணை கொடுமை மற்றும் குடும்பத் தகராறு காரணமாக இளம்பெண் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் இந்த சம்பவம் கர்நாடக மாநிலம் தார்வாட் மாவட்டத்தில் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.