கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட சயனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ல் காவலாளியை கொலை செய்து, கொள்ளையடித்ததாக, சயன், மனோஜ் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்த கோத்தகிரி போலீசார், அவர்களைக் கைது செய்தனர்.
இவர்களை ஜாமீனில் விடுதலை செய்து, கோத்தகிரி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த ஜாமீனை ரத்து செய்யக் கோரி காவல் துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏற்றுக் கொண்டு, நீலகிரி அமர்வு நீதிமன்றம், இருவரின் ஜாமீனை ரத்து செய்து உத்தரவிட்டது. இதையடுத்து, இருவரும் மீண்டும் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஓராண்டுக்கும் மேல் சிறையில் உள்ளதால், ஜாமீன் வழங்கக் கோரி சயன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். மனுதாரர் தரப்பில், ஆஜரான வழக்கறிஞர் சுந்தர் மோகன், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மேலும் எட்டு பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதாலும், கீழமை நீதிமன்றத்தில் சாட்சிகள் விசாரணை ஏற்கனவே துவங்கி விட்டதாலும் ஜாமீன் வழங்க வேண்டும் என கோரினார்.
இதையடுத்த இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.சுப்ரமணியம் வழக்கு முடியும் வரை நீலகிரியில் தங்கியிருக்க வேண்டும்என்றும், வாரம் ஒரு முறை விசாரணை நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்துயிட வேண்டும் என்ற நிபந்தனையுடன் சையனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.