நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில், மனைவியின் அக்காள் மற்றும் தங்கையின் புகைப்படங்களை செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆபாசமாகச் சித்தரித்ததாகக் கூறப்படும் 35 வயது நபரை அனைத்து மகளிர் போலீசார் கைது செய்துள்ளனர். மனைவி அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வட்டமலை ஆண்டவர் நகர் பகுதியில் வசித்து வருபவர் இளங்கோவன் (35). இவர் ஆந்திர மாநிலம் நெல்லூரில் உள்ள பவர் பிளான்ட்டில் பணியாற்றி வருகிறார். கூடலூர் தாலுகா நெலாக்கோட்டை பகுதியைச் சேர்ந்த இவர், அதே ஊரைச் சேர்ந்த மேனகா (30) என்பவரைக் கடந்த 2021ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
மேனகா தற்போது குமாரபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் மருத்துவ ஆய்வகத் தொழில்நுட்பம் (MLT) படித்து வருகிறார். இதற்காக வட்டமலை ஆண்டவர் நகர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து கணவருடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு 25 வயதில் அக்காளும், 20 வயதில் தங்கையும், 15 வயதில் தம்பியும் உள்ளனர்.
இந்த நிலையில், கடந்த 30ஆம் தேதி இரவு, மறுநாள் கல்லூரிக்குச் செல்வதற்காகத் தேவையான பை, லேப்டாப், பென்டிரைவ் உள்ளிட்ட பொருட்களை மேனகா தயார் செய்து கொண்டிருந்தார். அப்போது, கல்லூரிக்குக் கொண்டு செல்லும் லேப்டாப்பைத் திறந்து பார்த்தபோது, அதில் தனது அக்காள் மற்றும் தங்கையின் முகங்களை நிர்வாணப் பெண்களின் உடல்களுடன் இணைத்து ஆபாசமாகச் சித்தரிக்கப்பட்ட படங்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மேனகா, இதுகுறித்து கணவரிடம் கேட்டுள்ளார். அப்போது, ஆபாசப் படங்கள் பார்க்கும் பழக்கம் கொண்ட இளங்கோவன், AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இருவரின் புகைப்படங்களையும் மாற்றியமைத்ததாகக் கூறியுள்ளார் எனப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அந்தப் படங்களை வேறு யாருக்காவது அனுப்பியிருப்பாரோ என்ற அச்சத்தில் மேனகா, நடந்த சம்பவம் குறித்து தனது தாய் மற்றும் சகோதரிகளிடம் தெரிவித்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அவர், கணவரின் செயல்பாடு குறித்து திருச்செங்கோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில், போலீசார் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 67 மற்றும் பாரதிய நியாய சன்ஹிதாவின் பிரிவு 79 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து இளங்கோவனைக் கைது செய்தனர். அவரிடமிருந்து லேப்டாப்கள் மற்றும் செல்போன்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாகச் சித்தரித்ததாகக் கூறப்படும் இந்தச் சம்பவம் குமாரபாளையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்